அண்மைய நியமனங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கம் பெற விரும்புகிறது நாடாளுமன்றக் குழு

பொது நியமனங்கள்மீதான நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக்குழு பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்திக்க அனுமதி கேட்டுக் கடிதம் எழுதும்.

அண்மையில் செய்யப்பட்ட மூன்று முக்கிய நியமனங்கள் குறித்தும் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என அத்தேர்வுக் குழுவின் தலைவர் வில்லியம் லியோங் கூறினார்.

அப்துல் ஹமிட் படோர் போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரலாகவும் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமை நீதிபதியாகவும் ஆகக் கடைசியாக லத்திபா கோயா மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) தலைவராக நியமிக்கப்பட்டதையும்தான் பிகேஆர் செலாயாங் எம்பி-ஆன லியோங் குறிப்பிடுகிறார்.

“இந்த நியமனங்கள் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அது எங்களுக்குத் தெரிய வந்ததுகூட பத்திரிகைகள் மூலமாகத்தான்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“ஆச்சரியமடைந்தோம், (நியமனங்கள் பற்றி விவாதிக்க இடமளிக்காதது குறித்து) ஏமாற்றமடைந்தோம்”, என்றாரவர்.

பிரதமருக்கு ஒரு கடிதம் வரையப்பட்டு வருவதாகவும் இன்று அது அவருக்கு அனுப்பப்படும் என்றும் லியோங் கூறினார்.