அம்னோ-பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் – சேவியர் ஜெயக்குமார்

அடுத்த தேர்தலில் தேசிய முன்னனிக்குப் பதில் கூட்டுக்கட்சியாக உருவாக இருக்கும் அம்னோ – பாஸ் ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் என்றார் சேவியர் ஜெயக்குமார்.

நேற்று இரவு தமிழ் அறவாரியத்தின் நிதிதிரட்டும் நிகழ்வில் சிறப்பு உரையாற்றிய நீர், நில இயற்கைவள அமைச்சர் டாக்டர். சேவியர், நம்பிக்கைக்கூட்டணியின் சவால்கள் மிகுந்த சூழல்களை விவரித்து மாற்று அரசியல் நிலையை விளக்கினார்.

“நாங்கள் தேர்தல் அறிக்கையில் வழங்கிய பல உறுதிகளை இன்னும் செயலாக்கம் செய்ய முயற்சி செய்து வருகிறோம். அதில் பல சிரமங்களையும் எதிர்நோக்கியுள்ளோம். இது மக்களிடையே ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது”.

“இந்தியர்களுக்காக அளிக்கப்பட்ட உறுதிகளும் இன்னும் முழுமையாக செயலாக்க வடிவம் பெறவில்லை என்ற ஏக்கமும் உள்ளது. இவைகளுக்கு காரணம் அரசாங்கத்தின் நிதிநிலைமையாகும் என்றார் சேவியர்.

அடுத்த தலைமுறை மலேசியர்களுக்காக ஒரு சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்ற வேட்கையில் தற்போதைய அரசாங்கம் தனது கொள்ககைகளை அமைத்து வருகிறது என்றும் அடிப்படையில் ஓர் ஊழலற்ற நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தில் சிக்கனத்தையும் கையாள முற்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுடன் தரமான வாழ்வாதாரத்தை பெற்றவர்களாக திகழ வேண்டும் என்ற வேட்கை தன்னிடம் உள்ளதாக அறிவித்தார்.

“கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்து எங்களை ஆட்சியில் அமர்த்திய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. அதிலும் பொரும்பான்மை இந்தியர்கள் எங்களுக்கு வாக்களித்தது பெருமைக்குரியது ஆகும்”.

“இந்தியர்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்வுகாண அரசாங்கத்தால் மட்டும் இயலாது. சமூகத்தின் முழுமையான விழிப்புணர்வும் அதற்கேற்ற ஈடுபாடும் அத்தியாவசியமாகும்”

“எங்கள் தவணையில் ஒரு வலுவான மக்களை மையமாக கொண்ட அரசாங்க கொள்கைகளை அமைக்க முனைந்துள்ளோம். அது குடிமக்கள் நாட்டின் வளத்திற்கு ஏற்ற ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகுக்கும்”  என்றார்.