ஹாங்காங்: “இது வாழ்வா, சாவா போராட்டம்” – சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்கிய லட்சக்கணக்கான மக்கள்

அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் சீனாவின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் பேரணி சென்றனர்.

இந்த சட்டத்திருத்தமானது ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்க அனுமதிக்கிறது.

ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பின் இப்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் வீதியில் பேரணியாக சென்று போராடி வருகிறார்கள்.

வாழ்வா சாவா

அடிக்கும் வெயிலில் வெள்ளை உடை அணிந்து வணிகர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஜனநாயகத்திற்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் மத குழுக்கள் என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஹாங்காங்: சீனாவுக்கு எதிராக மீண்டும் மக்கள் திரள் போராட்டம்

“இது தீய சட்டம். இது ஹாங்காங்கிற்கு வாழ்வா சாவா போராட்டம். அதனால்தான் நான் வீதிக்கு வந்து போராடுகிறேன்” என்கிறார் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய 59 வயதான பேராசிரியர் ராக்கி சாங்.

மக்களின் குரல்களுக்கு யாரும் செவிசாய்ப்பது இல்லை என்று ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறி உள்ளார் 18 வயதான இவான் வாங்.

“சர்வதேச நிதி மையமாக இருக்கும் ஹாங்காங்கின் மரியாதையை மட்டும் இந்த சட்டம் கெடுக்கவில்லை. நீதி அமைப்பின் மீதும் இது தாக்கம் செலுத்துகிறது” என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

குடை போராட்டம்

ஹாங்காங்: சீனாவுக்கு எதிராக மீண்டும் மக்கள் திரள் போராட்டம்

இந்த சட்டத்தை குறித்து தெரிந்து கொள்வதற்கு முன் ஜனநாயகம் கோரி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டம் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங்கில் அம்பிரல்லா போராட்டம் நடந்தது.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அரசு தலைமையகங்களின் முன்னால் இருந்த வளாகங்களை சட்டபூர்வமற்ற முறையில் ஆக்கிரமித்த ஜோசுவா வொங், அலெக்ஸ் சொவ் மற்றும் நாதன் லா உள்ளிட்ட இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டம், குடை (அம்பிரல்லா) இயக்கம் என்று கூறப்படும் ஜனநாயக போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. இதில் சீனாவால் ஆளப்பட்டுவரும் தங்களது நிலப்பரப்பில் ஜனநாயக மாற்றம் நிகழ வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் இணைத்து கொண்டனர்.

Presentational grey line
Presentational grey line

என்ன சொல்கிறது இந்த சட்ட திருத்தம்?

இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா, தாய்வான் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்ட திருத்தம் அனுமதிக்கிறது.

ஆனால், இந்த சட்டம் மூலமாக அரசியல் ரீதியாக எதிராக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் கருதுகிறார்கள்.

ஆனால், ஹாங்காங் நீதித்துறையிடம்தான் முழு அதிகாரம் இருக்கும். அரசியல், மத ரீதியாக குற்றங்கள் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என ஹாங்காங் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏன் இந்த சட்ட திருத்தம்?

கடந்தாண்டு 19 வயது வாலிபர் ஒருவர் 20 வயதான தன் காதலியை தைவானில் சுற்றுலாவில் இருக்கும் போது கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பி தைவான் சென்றுவிட்டார்.

ஹாங்காங்: சீனாவுக்கு எதிராக மீண்டும் மக்கள் திரள் போராட்டம்

தைவான் அதிகாரிகள் அவரை தங்களிடம் ஒப்படைக்க ஹாங்காங்கை கேட்டுக் கொண்டனர். ஆனால், குற்றவாளிகளை ஒப்புடைக்கும் சட்டம் இரு நாடுகள் இடையே இல்லாததால் அவரை ஒப்படைக்க ஹாங்காங் மறுத்துவிட்டது.

ஆனால், இப்போது ஏற்படுத்தப்பட இருக்கும் சட்ட திருத்தம் மூலம் அந்த குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க கோர மாட்டோம் என தைவான் கூறி உள்ளது. அந்தக் கொலை வழக்கை தனியாக விசாரிக்க ஹாங்காங்கை வலியுறுத்துவோமென அவர்கள் கூறி உள்ளனர்.

ஹாங்காங்கின் கதை

எப்படியாக இருந்தாலும் ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டில்தானே உள்ளது. பின் ஏன் இந்த சட்ட திருத்தமென சந்தேகம் ஏற்படலாம். அதற்கு ஹாங்காங் குறித்து அடிப்படையான சில தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஹாங்காங்: சீனாவுக்கு எதிராக மீண்டும் மக்கள் திரள் போராட்டம்

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டப் பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு முறைகளை கொண்டு இயங்கி வருகிறது.

ஹாங்காங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது. சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹாங்காங் மக்களுக்கு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளுடன் ஹாங்காங் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தை போட்டுள்ளது. ஆனால், அது போன்ற சட்ட ஒப்பந்தமும் சீனாவுடன் இல்லை. இருபது ஆண்டுகளாக இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சீனாவுடன் இந்த சட்ட ஒப்பந்தம் எட்டப்படாததற்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சீனாவில் உள்ள மோசமான சட்டப்பாதுகாப்புதான் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். -BBC_Tamil