இந்தியாவில் ஜாகிர் நாய்க்குக்கு எதிராக கைது வாரண்ட் பெற முயற்சி

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் இந்தியாவிடமே ஒப்புவிக்கப்படலாம் என்று த இந்து கூறியுள்ளது.

இந்தியாவின் சட்ட அமலாக்க இயக்ககம்(இ.டி), மும்பாய் சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் பணச் சலவைச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கு தொடர்பாக ஜாகிர் நாய்க்குக்கும் வேறு சிலருக்கும் எதிராக பிடி ஆணை பெறவிருப்பதாக அந்த நாளேடு கூறிற்று.

ஜாகிருக்கு எதிராக பிணையத்தில்(ஜாமீனில்) விடா ஆணை பிறப்பிக்கலாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

பிணையத்தில் விடா ஆணை பிறப்பிக்கப்படும் பட்சத்தில் சமயப் போதகருக்கு எதிராக சிவப்பு அறிவிக்கை வெளியிடுமாறு இண்டர்போலையும் அவரைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி மலேசியாவையும் இடி கேட்டுக்கொள்ளும்.

மலேசியா இண்டர்போலில் உறுப்பு வகிக்கிறது என்பதுடன் இந்தியாவுடன் குற்றவாளிகளைப் ஒப்படைக்கும் ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது.

பணச் சலவை நடவடிக்கைகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இடி, 2018 தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின்கீழ் ஜாகிர்மீது மேலும் பல வழக்குகளைத் தொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாகிர் டுபாயில் ஆடம்பர பங்களாக்கள் கட்டுவதில் முதலீடு செய்திருப்பதாகவும் அவரது இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம் “சந்தேகத்துக்குகிடமான, அடையாளம் காணப்படாத மூலங்களிலிருந்து” பெரும் பணம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்தச் சமயப் போதகர் அவரது தாய்நாடான இந்தியாவில் வெறுப்பூட்டும் பேச்சுகள் பேசி வந்ததாகவும் அவரது அமைதி (பீஸ்) டிவி வழி பயங்கரவாதத்தைத் தூண்டி வந்ததாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.