மாநாட்டில் ஜம்ரி வினோத்தைப் பேச விட்டிருக்கக் கூடாது: பெர்லிஸ் பாஸ் ஆத்திரம்

நேற்று பாஸ் முக்தமார்(பேராளர் மாநாடு) தொடக்க விழாவில் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க்கின் மாணவர் முகம்மட் ஜம்ரி வினோத் காளிமுத்துவைச் சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேச வைத்ததைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதை பெர்லிஸ் பாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பெர்லிஸ் பாஸ் இளைஞர் பிரிவு பேராளர் முகம்மட் அஸ்ரின் ஜும்ரி, அடிக்கடி கட்சியைப் பழித்துப் பேசி வந்திருக்கும் ஜம்ரி வினோத்தைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது மாநில பாஸ் உறுப்பினர்களுக்கு மன வருத்தம் தந்தது என்றார்.

“பேராளர்கள் தங்கள் விவாதங்களை முடித்துக்கொள்ளவில்லை அதற்கிடையில் ஜம்ரி வினோத்தைப் பேச அனுமதித்தது பெர்லிஸ் பாஸ் இளைஞர்களை வருத்தமுற வைத்தது.

“விவாதங்கள் முடியும்வரை காத்திருந்திருக்க வேண்டும். ஆனால், ஜம்ரிக்கு இடமளிக்க நண்பர்கள் சிலர் அவர்களின் பேச்சைச் சுருக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று”, என முகம்மட் அஸ்ரின் கூறினார்.

நேற்று அவர் பேசியதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இதற்குமுன் அவர் பெர்லிஸ் பாஸ் குறித்து தவறான கருத்துகளைச் சொல்லி வந்திருக்கிறார்.

“இமாம்கள் பணிநீக்கம் செய்யபப்ட்டதற்கு பெர்லிஸ் பாஸ்தான் காரணம் என்றவர் சொன்னார். சுல்தானுக்கு எதிராக எதிர்ப்பைத் தூண்டிவிட்டதும் நாம்தான் என்று குற்றஞ்சாட்டியவரும் அவர்தான்.

“அதனால்தான் ஜம்ரி வினோத்-தின் வருகை எங்களுக்கு வருத்தமளித்தது”, என்றவர் சொன்னார்.