கடிதப் பரிமாறல்களையடுத்து வடகொரியாவுடன் புதிய பேச்சுவார்த்தைகள்?

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் கடிதங்களை பரிமாறிக் கொண்ட பின்னர் தென்கொரியாவுக்கு இவ்வாரயிறுதியில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் செய்யவுள்ள நிலையில், வடகொரியாவின் அணுத் திட்டத்தை நிறுத்துவத்தை இலக்காகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிப்பதற்கான நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.

ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி-20 தலைவர்களின் மாநாட்டைத் தொடர்ந்து இரண்டு நாள் விஜயமொன்றாக தென்கொரியாவுக்கு எதிர்வரும் சனிக்கிழமை செல்லவுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜயே-இன்னை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பார் என ஜனாதிபதி மூன் ஜயே-இன்னின் பேச்சாளர் கோ மின்-ஜங் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், தலைவர் கிம்முக்கு ஜனாதிபதி ட்ரம்ப் அனுப்பிய கடிதமானது இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி ட்ரம்புக்கும், தலைவர் கிம்முக்குமிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து தடைப்பட்டுள்ள பேச்சுகளை மீள ஆரம்பிக்க வழிவகுக்கும் என நம்புவதாக ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ தெரிவித்த சில மணித்தியாலங்களிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வடகொரியா, தென்கொரியாவைப் பிரிக்கும் சூனிய வலயத்துக்குக்கான விஜயமொன்றை ஜனாதிபதி ட்ரம்ப் கருத்திற் கொள்வதாக தென்கொரிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ள நிலையில், தென்கொரிய விஜயத்தின்போது தலைவர் கிம்மைச் சந்திக்கும் திட்டமெதுவையும் கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

-tamilmirror.lk