பாசீர் கூடாங் மாசு பிரச்சனைக்கு முழுமையான தீர்வு தேவை, ஜொகூர் பி.எஸ்.எம். வலியுறுத்து

உயிர் சேதம் எதுவும் இல்லையென்றாலும், இரண்டாம் முறையாக ஏற்பட்டுள்ள காற்று தூய்மைகேடு பிரச்சனை, பாசீர் கூடாங் வட்டார மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவ்வட்டார மக்களின், குறிப்பாக குழந்தைகளின் சுகாதாரம், இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என ஜொகூர் மாநில மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சு இப்பிரச்சனைக்கு முழுமையான, நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டுமெனவும் ஜொகூர் பி.எஸ்.எம். வலியுறுத்தியுள்ளது.

ஜொகூரில், பாசீர் கூடாங் வட்டாரம், அதிவேகமாக முன்னேறி வரும் ஒரு துறைமுக நகரமாகும். இங்குப் பல நவீன, இரசாயனத் தொழிற்சாலைகள் இயங்குவதால், பொதுவாகவே இங்குக் காற்று மாசுபாடு சற்று அதிகமாகவே உள்ளது எனக் கூறிய, பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த மோகன் பெரியசாமி, இதனால், அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் சமூக மையங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன என்றார்.

பாசீர் கூடாங்கில், எந்த ஒரு புதிய இரசாயன தொழிற்சாலைக்கும் ஒப்புதல் வழங்கப்போவதில்லை என்று கூறியுள்ள எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் இயோ பீ யின்-இன் அறிவிப்பை ஜொகூர் பி.எஸ்.எம். வரவேற்பதாக பெ மோகன் மலேசியாஇன்று-விடம் கூறினார்.

அதன் அடிப்படையில், ஒரு பகுதியில் புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கும்போது, அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அமைச்சு சீரமைத்து கொடுக்க வேண்டும். புதிய ஆலையை நிர்மாணிப்பதற்கு முன்னர், அவ்விடத்தில் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் இரசாயணத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைகளையும் அதன் வகைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டினை மட்டும் கருத்தில் கொள்ளாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் சுகாதாரம் ஆகியவற்றிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“மாநிலப் பொருளாதார மேம்பாட்டை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும், அந்நிய மற்றும் உள்ளூர் பொருளாதார முதலீட்டுத் திட்டங்கள், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது,” என்றார் அவர்.

தொழிற்சாலைகளின் அதிகரிப்பு மட்டுமின்றி, காடுகள் அழிக்கப்படுவதும் இக்காற்று தூய்மைக்கேடு பிரச்சனைக்குக் காரணமென மோகன் தெரிவித்தார்.

“தொழிற்துறை நிர்மாணிப்பிற்காகப் பல தோட்டங்கள், காடுகள் அழிக்கப்பட்டு வருவதால், பசுமை மண்டலம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால், மாசடைந்த காற்று சுத்திகரிக்கப்படாமல், பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அண்மைகாலமாக, இப்பிரச்சனை மோசமடைந்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

“எனவே, இனிவரும் காலங்களில், இரசாயன மற்றும் கனரக தொழில்துறை பகுதி வளர்ச்சியைத் திட்டமிடும்போது, இந்தப் பாசீர் கூடாங் பிரச்சனையை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் போதுமான இடையக மண்டலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என மோகன் வலியுறுத்தினார்.

இந்தப் பகுதியில் அக்ரிலோனிட்ரைல், அக்ரோலின் மற்றும் மெத்தில் ஆகிய மூன்று வகையான வாயுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் அறிக்கை கூறுகிறது. இதனை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில், இங்குள்ள தொழிற்சாலைகள், தங்கள் உற்பத்தி செயல்முறையிலிருந்து வெளியேறும் வாயுக்களை வடிகட்டவோ அல்லது சுத்தம் செய்யவோ இல்லை என்பதையே இது குறிக்கிறது எனத் தெரிவித்த அவர், அத்தகைய தொழிற்சாலைகளை அடையாளங்கண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொலைதூரத் திட்டமாக, காற்று குறியீடுகளைத் துள்ளியமாகக் கண்டறியும் செயல்பாட்டுக் கருவிகளை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியப் பகுதிகளில் அரசாங்கம் பொறுத்த வேண்டும்.

குறிப்பாக, இவ்வட்டாரத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் இக்கருவி பொறுத்தப்பட்டால், பள்ளி நிர்வாகம் காற்று குறியீட்டை உடனுக்குடன் அறிந்து, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.