ராட்சசி திரை விமர்சனம்

ஜோதிகா தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் வெறும் பெண்கள் என்றும் மட்டுமில்லாமல் இந்த முறை வளரும் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு பள்ளி குழந்தைகளுக்காக குறிப்பாக அவர்களின் பெற்றோர்களுக்கான ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளார், இதில் ஜோதிகாவின் மாணவர்கள் மட்டுமின்றி அவரும் பாஸ் செய்தார்களா? பார்ப்போம்.

கதைக்களம்

ஜோதிகா பெரும் பதவியில் இருந்து எத்தனையோ நிறைய சம்பளம் கிடைக்கும் வேலைகள் இருந்தும், இந்த வேலை தான் வேண்டும் என்று வாங்கி வருகின்றார், ஒரு அரசு பள்ளி டீச்சராக.

ஆனால், அந்த பள்ளிக்கூடத்தில் எதுவுமே சரியில்லை, இருக்கின்ற விதிமுறைகளை கூட யாரும் ஒழுங்காக கடைப்பிடிப்பது இல்லை, இதற்கெல்லாம் முக்கிய காரணம் சாட்டை படத்தில் வரும் தம்பி ராமையா போல் ஒரு கதாபாத்திரம் இந்த படத்திலும் வருகின்றது.

இதற்கிடையில் தனியார் பள்ளியின் ஆதிக்கம் வேற, இவை அனைத்தையும் முறியடித்து அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை எப்படி சீர்த்திருத்தி, அவர்களின் தரத்தை உயர்த்தி நல்வழிக்கு கொண்டு வருகின்றார் ஜோதிகா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜோதிகாவின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட் இந்த கதாபாத்திரம் என்று சொல்லி விடலாம், அதை விட அவர் சமீபத்தில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்ததில் இது தான் நம்பர் 1, பெர்ப்பாமன்ஸாகவே கலக்கியுள்ளார். படத்தில் எந்த ஒரு இடத்திலும் இவர் முகத்தில் ஒரு பெரிய சிரிப்பை பார்த்துவிட முடியாது.

படம் முழுவதும் அட்வைஸ், நீண்ட வசனங்கள் இருந்தாலும் எங்குமே அலுப்புத்தட்டவில்லை, இதில் குறிப்பாக ‘கணக்கு பாடத்தில் ஒரு பையன் 100 மார்க் எடுத்து, சயின்ஸில் தோல்வி பெற்றால், அவன் மக்கு பையனா, கல்வி சிஸ்டம் சரியில்லை’ என யோசிக்க வைக்கும் பல வசனங்கள் கவர்கின்றது.

ஒரு பையன் என்னை பாக்கின்றேன் மிஸ், என கூறும் பெண்ணிடம் ஜோதிகா சொல்லும் கதை, அரசாங்க பள்ளியில் இருக்கிற ரூல்ஸை ஒழுங்காக கடைப்பிடித்தாலே நன்றாக இருக்கும் என்று காட்டிய விதம் என காட்சிக்கு காட்சி கைத்தட்டல் பறக்கின்றது.

அதிலும் ஜோதிகா தன் தந்தை இழப்பில் கூட அழாமல், பள்ளிக்கு சென்று உருகும் காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைக்கின்றது, சூப்பர் ஜோதிகா. ஜோதிகாவிடம் காதலை சொல்லும் குட்டிப்பையன் கூட, ஓவர் ஆக்டிங் இல்லாமல் யதார்த்தமாக கியூட்டாக கடந்து செல்கின்றார்.

இப்படி பல அழகிய காட்சிகள் படம் முழுவதும் வருகின்றது, இப்படம் வெறும் மாணவர்களுக்காக படம் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது, ஒவ்வொரு பெற்றோர்களுக்கான படமாகவும் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு அப்படியே அரசாங்க பள்ளியை பார்த்த அனுபவம், ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

க்ளாப்ஸ்

ஜோதிகா மற்றும் நடிகர், நடிகைகள் அனைவரின் நடிப்பு.

எடுத்துக்கொண்ட களம், பெற்றோர்கள் எல்லாம் தனியார் பள்ளியை நோக்கி ஓடும் நேரத்தில், அரசாங்க பள்ளியை பற்றி பேசிய விதம்.

இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.

ஜோதிகா ஒரு காட்சியில் சண்டை எல்லாம் போடுகின்றார், அட என்னடா இது என்று நினைக்க, அதற்கு ஒரு பின்கதை வைத்தது செம்ம.

பல்ப்ஸ்

கண்டிப்பாக சாட்டை படத்தை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

மொத்தத்தில் குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் இந்த ராட்சசி கீதா ராணி மேடத்தை.

-cineulagam.com