‘நிலமற்றவர்களாகவே இருக்கும் தலித்துகள்’ – இங்கு நிலம் ஏன் முக்கியம்?

நாம் ஒரு உண்மையை இங்கு எதிர்கொண்டே ஆக வேண்டும். வேளாண்மையை பிரதானமாக கொண்டிருக்கும் இந்தியாதான், சாதியையும் பிரதானமாக கொண்டிருக்கிறது.

இவை இரண்டும் ஒன்றாக கலக்கும்போது மோசமான விளைவுகள் ஏற்படும். நாம் இதைதான் தற்போது எதிர்கொண்டு வருகிறோம். ஏழ்மை, குறைந்த உற்பத்தித்திறன் போன்ற பலவற்றுக்கும் இதுவே காரணம்.

இந்தியாவில் தலித்துகள் சுதந்திரமாக இல்லை. தங்களது சொந்த நிலங்களில் இருந்தே இடம்பெயர்ந்து எங்கு வசிப்பது என்று தெரியாமல் பலரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்று சொந்த நிலங்கள் இல்லை என்பதால், சட்டப்பூர்வமாக, அதிகாரப்பூர்வமாக அல்லது அரசியல் சாசனப்படி இந்தியராக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. நீங்கள் ஓர் இந்தியராக இருக்க வேண்டும் என்றால், அதற்கு நிலம் வைத்திருக்க வேண்டும்.

ஒரு குடிமகனாக இருந்தால், அவனுக்கு அந்த நாட்டின் வளங்கள் மீது உரிமை இருக்க வேண்டும். நிலம்தான் இங்கு முக்கிய வளம். பிற வளங்களுக்கு எல்லாம் தாய் என்றே சொல்லலாம். நம் மரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு வளம்.

உங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை, சொந்த வீடு இல்லை என்றால், ஒரு நிரந்தர பாதுகாப்பின்மைக்கு ஆளாகும் நிலை ஏற்படும். ஒருவரின் இருப்பை உரிமையை நிலைநாட்ட நிலம் உதவுகிறது. ஓர் உறுதியான சொத்தாக இது பார்க்கப்படுகிறது.

தலித்

பெரும்பாலான சமூக உறவுகளும் நிலம் மற்றும் நிலம் சார்ந்த வேலைகளிலேயே இருக்கிறது. அதனால், சொந்த நிலம் என்ற ஒன்று இல்லை என்றால், ஒருவர் தள்ளி வைக்கப்படுகிறார் அல்லது புறக்கணிக்கப்படுகிறார்.

தலித்துகளுக்கு நிலம் வழங்காமல் இருப்பது நம் நாட்டின் சாதிய மனநிலையையே பிரதிபலிக்கிறது. அவர்களை நாட்டுக்கு தேவையற்றவர்களாகவும், சொந்த நாட்டிலேயே மாற்றான் தாய் பிள்ளையாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் இது காண்பிக்கிறது.

தற்போதைய நிலையில் பெரும்பாலான தலித்துகள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை, அவர்களிடம் நிலம் இல்லாதது. இதனால், நில உரிமையாளர்கள் தலித்துகளை நோக்கி அவர்கள் உரிமைகள் குறித்தும் நாட்டை சேர்ந்தவர்கள்தானா என்பது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது இடம் சார்ந்த உணர்வு மட்டுமல்ல. இருப்பையும் சார்ந்தது. இந்த நாடு தங்களுக்கும் சொந்தம் என்பதை தெளிவுபடுத்த தலித்துகள் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

சமத்துவத்தை கோருவதற்கான தீவிர முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும், நிலங்கள் இருக்கும் அதாவது, வளங்கள் இருக்கும் சாதியினர், நிலத்துக்காகவும், சுதந்திரம் பெறவும் தலித்துகள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நிலமற்றவர்களின் புள்ளி விவரங்கள்

சமீபத்தில் வெளியான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, 71 சதவீத தலித்துகள் தங்களுக்கு என்று சொந்த நிலம் இல்லாது, மற்றவர்கள் நிலத்தில் வேலை பார்க்கிறார்கள். கிராமப்புற பகுதிகளில், 58.4 சதவீத தலித் குடும்பங்களிடம் சொந்த நிலம் இல்லை.

அதுவும் தலித்துகள் அதிகமாக இருக்கும் ஹரியானா, பஞ்சாப் மற்றும் பிகார் போன்ற மாநிலங்களில் 85% தலித்துகள் தங்களின் நில உரிமையாளர்களின் தயவில் வாழ்கின்றனர்.

அதே சமயத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், குஜராத், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் இருக்கும் 60 சதவீதத்திற்கும் மேலான தலித்துகள் சிறந்த எதிர்காலத்துக்காக ஏங்குகின்றனர்.

மேலும், பிகார், ஹரியானா, பஞ்சாப், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான தலித் விவசாயிகள், விவசாயக் கூலிகளாகவே இருக்கின்றனர்.

விவசாயக் கூலி

மகாராஷ்டிராவின் மரத்வாடா பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் எங்கள் பாதுகாப்புக்காகவும், சிறந்த எதிர்காலத்திற்காகவும் வேறொரு நகரத்துக்கு இடம்பெயர்ந்தோம். சொந்த நிலம் இல்லாததால் வேறொரு நகரத்துக்கு செல்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

நகர்ப்புற வேலை சந்தையில், இருப்பதிலேயே குறைந்த வருமானம் வரும் வேலைகளில்தான் தலித்துகள் இருப்பார்கள். கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வது, போன்ற முறைசாரா வேலைகளில் அவர்கள் பணிபுரிவார்கள்.

எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றால், தெருவோரங்களில் கூடாரம் அமைத்து அவர்கள் வாழ்க்கையை வாழ்கின்றனர். இல்லையென்றால், பூங்காக்கள் அல்லது நகரங்களில் உள்ள பொது இடங்களில் பிச்சை எடுத்து பிழைக்கின்றனர்.

இந்த நெருக்கடியால், விவசாயத்தை மையாக வைத்திருக்கும் பொருளதாரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் தலித்துகளுக்கு எந்த ஊக்கமும் அளிக்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் அரசுத்துறையில் வேலை தேடுவதே ஒரே வழியாக இருக்கிறது.

தலித் வகுப்புகளைச் சேர்ந்த பலரும் அரசு வேலைக்கான தேர்வுகளுக்கு தயாராவதை நாம் பார்க்க முடிகிறது. அவர்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழி அதுதான். மற்ற அனைத்து துறைகளும் தலித்துகளுக்கான கதவை மூடிவிட்டன. இதன் காரணமாகவே இந்த நாட்டில் விரக்தி அடைந்துள்ள சில இளைஞர்கள், முறையாக வேலை பார்க்காமல், அழிவு பாதையை நோக்கி செல்கின்றனர்.

சமீபத்தில் நிலமற்றவர்கள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியது இங்கு நாம் ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டிய கேள்வி. தலித்துகளுக்கு இருக்கும் சட்ட உதவிகள் ஏராளம்தான், ஆனால், எந்த அளவுக்கு அது அமலில் உள்ளது என்பது கேள்விக்குறியே.

1950களில் இருந்து நில சீர்திருத்தம் மேற்கொள்ள திட்ட ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், தலித்துகள் இன்னும் ஒதுக்கப்பட்டவர்களாகவே இந்தியாவில் வாழ்கிறார்கள்.

-BBC_Tamil

(சூரஜ் யாங்கடே, Caste Matters என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக உள்ளார்.) 

TAGS: