எம்ஏஎஸ்-ஸுக்குப் புத்துயிர் அளிக்க நான்கு பரிந்துரைகள்

நலிவடைந்த மலேசிய விமான நிறுவனத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள நான்கு பரிந்துரைகளை அரசாங்கம் அலசி ஆராய்ந்து வருவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

“ஏற்கனவே நிர்வாகத்தைப் பல தடவை மாற்றி விட்டோம், பலனில்லை, அதனால், (பரிந்துரைகளைக்) கவனமாக ஆராய வேண்டியுள்ளது.

“அனுபவம் வாய்ந்த ஒருவரிடம்தான் ஒப்படைப்போம்”, என்றவர் சொன்னார்.

நான்கு பரிந்துரைகளையும் வழங்கியவை உள்நாட்டு நிறுவனங்கள் என்று தெரிகிறது. ஆனால், அவற்றால் முடியுமா என்பதில் மகாதிருக்கு முழு நம்பிக்கை இருப்பதுபோல் தெரியவில்லை.

“அவர்களைப் பொறுத்தவரை முடியும் என்று நினைக்கிறார்கள். கடந்த காலத்தில் நாமும் பலரிடம் கொடுத்துப் பார்த்தோம் யாராலும் (எம்ஏஎஸ்-ஸை) சீரமைக்க முடியவில்லை.

“இப்போது பலரும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களைத் தேடிச் செல்வதால் குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களுடன் போட்டிப் போட வேண்டியுள்ளது. அது எளிதல்ல”, என்றார்.

அண்மையில், மகாதிரின் ஊடக ஆலோசகர் ஏ.காடிர் ஜாசின், குறைந்த கட்டண விமானச் சேவை விமான நிறுவனமான ஏர் ஏசியா-வுக்கு எம்ஏஎஸ்-ஸை மீட்டெடுக்கும் ஆற்றல் உண்டு என்று கூறினார்.