அமைச்சர்: இளைஞர் வயது வரம்பை நிர்ணயிப்பதில் ஜோகூர் பல்டி அடிப்பது ஏன்? ஊடகங்கள்தான் கண்டறிய வேண்டும்

இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான், இளைஞருக்கான வயது வரம்பை நிர்ணயம் செய்வதில் ஜோகூர் அடிக்கடி பல்டி அடிப்பது ஏன் என்பதை கண்டறியும் பொறுப்பை ஊடகங்களிடமே விட்டுவிடுவதாகக் கூறினார்.

“இது ஏன் என்பதை ஊடக நண்பர்கள் ஆராய வேண்டும்”, என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரத்தில், ஜோகூர் அரசு 48 மணி நேரத்தில் மூன்று தடவை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. முதலில் மத்திய அரசாங்கம் நிர்ணயித்த வயது வரம்பை அது ஏற்கவில்லை, பிறகு உடன்பட்டது, அதன் பின்னர் இளைஞர் என்பார் 40வயதுக்கு உட்பட்டவர்கள்தான் என்ற அதன் பழைய நிலைப்பாட்டுக்கே திரும்பிச் சென்றது.

ஆகக் கடைசி முடிவை நேற்றிரவு அறிவித்த ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஷேக் உமர் பாக்ரிப் அலி, “பல தரப்புகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், யாருடன் கலந்தாலோசிக்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.