இரானுக்கு பதிலடி கொடுக்க இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் பிரிட்டன்

இரானுடனான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடாவுக்கு தனது இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் திட்டத்தை பிரிட்டன் முன்னெடுத்துள்ளது.

தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் இருக்கும் எச்.எம்.எஸ் டன்கன் போர்க்கப்பல் அடுத்த வாரம் எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ் போர்க்கப்பலுடன் பாதுகாப்பு பணியில் இணைய இருக்கிறது.

கடந்த புதன்கிழமையன்று, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று இரானிய படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்தே, அந்தப் பகுதிக்கு இரண்டாவது போர்க்கப்பலை அனுப்ப பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.

அதேசமயம், கடந்த வாரம் ஜிப்ரால்டர் கடற்பகுதியில் இரானுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை பிரிட்டன் கடற்படையினர் பிடித்திருந்தனர். அக்கப்பலை விடுவிக்குமாறு பிரிட்டனை இரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆபத்தான விளையாட்டில் பிரிட்டன் தலையிட வேண்டாம் என்று இரானிய அரசு தொலைக்காட்சியிடம் அரசு அதிகாரி ஒருவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹோர்மஸ் நீரிணைக்குள் சென்ற பிரிட்டன் நாட்டு எண்ணெய் கப்பலை சற்று தொலைவிலிருந்து எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ் போர்க்கப்பல் பின்தொடர்ந்து வந்தது
Image captionஹோர்மஸ் நீரிணைக்குள் சென்ற பிரிட்டன் நாட்டு எண்ணெய் கப்பலை சற்று தொலைவிலிருந்து எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ் போர்க்கப்பல் பின்தொடர்ந்து வந்தது

பிரிட்டன் மற்றும் இரான் இடையேயான உறவு, சமீப வாரங்களில் அதிக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, வளைகுடா எல்லைப்பகுதிக்கு உள்ள இரானிய கடல் பகுதியில் செல்லும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த கப்பல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாய அளவை ஐக்கிய ராஜ்ஜியம் அதிகப்பட்சமாக உயர்த்தி இருந்தது.

அதற்கு அடுத்த நாள், இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை சேர்ந்ததாக நம்பப்படும் படகுகள், வளைகுடாவுக்கு வெளியே ஹோர்முஸ் நீரிணைக்குள் நகர்ந்து கொண்டிருந்த பிரிட்டனின் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை நெருங்கி, அக்கப்பலை நிறுத்த முயற்சித்தன.

இச்சூழலில்தான், பிரிட்டனின் எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ், இரானிய படகுகள் மற்றும் பிரிட்டன் எண்ணெய் கப்பலுக்கு நடுவே செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரிட்டனின் இந்த குற்றச்சாட்டுகளை இரான் மறுத்துள்ளது. -BBC_Tamil