ரிஷாத்துக்கு மீள அமைச்சுப் பதவியா? நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் – எச்சரிக்கின்றார் ரத்தன தேரர்

“அமைச்சுப் பதவியை ரிஷாத் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலையடுத்து கடும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட ரிஷாத் பதியுதீனும் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்பார் என முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டார்.

இந்தநிலையிலேயே அத்துரலிய ரத்தன தேரர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சுப் பதவியை ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர் பதவிகளை வகித்த எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி ஆகிய மூவரும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி அத்துரலிய ரத்தன தேரர் கண்டியில் தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதையடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளைக் கூட்டாகத் துறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-tamilcnn.lk

TAGS: