ஹோட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்!

சோமாலியாவில் ஓட்டல் ஒன்றுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பத்திரிக்கையாளர் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் துறைமுகர நகரமான கிஸ்மயோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று அரசியல் சார்ந்த கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது ஓட்டல் வளாகத்துக்குள் வாகனத்தில் வந்த பயங்கரவாதி ஒருவன், ஓட்டலின் பிரதான கட்டடம் அருகே வாகனத்தை வெடிக்க செய்தான். இதில் வளாகத்தில் நின்றிருந்த பலர் தூக்கி வீசப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர், ஓட்டலிலிருந்த வாடிக்கையாளர்களை சுட்டனர். தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதல் நடத்தி துப்பாக்கி சூடு நடத்திய 4 பயங்கர வாதிகளை சுட்டி வீழ்த்தினர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 2 பத்திரிக்கையாளர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

-athirvu.in