ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தல் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பொலிஸ் அதிரடி!

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படும் கஞ்சா கடத்திச் செல்லப்பட்ட காரை, சினிமா பாணியில் விரட்டிச் சென்று, துப்பாக்கியால் சுட்டு, மதுரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு போதைப்பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் உத்தரவின்பேரில், மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், பெரம்பலூர் அருகே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருமாந்துறை டோல்கேட் பகுதியில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

வாகன சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த சிகப்பு நிற ஹோண்டா சிட்டி காரை தனிப்படை போலீசார் மறித்துள்ளனர். அந்த கார் போலீஸாருக்கு அருகில் நிற்பது போல் வந்து, நிற்காமல் போக்கு காட்டி விட்டு வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த காரை, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் ஸ்கார்பியோ காரில் பின் தொடர்ந்து துரத்தி சென்று, பின்பக்கம் மோதினர். ஆனாலும், கார் நிற்காமல் அதிவேகமாக சென்றதால் காரை நோக்கி, தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டால் பயந்து போன கார் ஓட்டுநர், இறுதியில் காரை நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து காரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது, காரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கஞ்சா, பெரியளவிலான பொட்டலங்களாக, கார் டிக்கியிலும், பின்பக்க சீட்டுக்கு அடியிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

காரை ஓட்டி வந்தவரும், அதிலிருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், ஒருவர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எருமைகுளம் கிராமத்தைச் சேர்ந்த “படம் முனியசாமி” என்பதும், மற்றொருவர், அதே பகுதியில் உள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த “வழிவிடும் முருகன்” என்பதும் தெரியவந்தது.

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து போலீசில் சிக்கிய படம் முனியசாமியும், வழிவிடும் முருகனும், ஏற்கனவே, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மதுரை தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். கஞ்சா கடத்தி கைதான இருவரும், மங்கலமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி., திஷாமிட்டல் மற்றும் டிஎஸ்பி தேவராஜன் தலைமையில் தொடர் விசாரணை நடைபெறுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்தப்பட்ட காரை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார், சினிமா பாணியில் துரத்தி சென்று, துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம், கஞ்சா கடத்தல்காரர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

-https://athirvu.in

TAGS: