அன்வார் பிஎஸ்ஆர்மீது மீனவர்களைச் சந்தித்தது ‘வெறும் நாடகம்’- கெராக்கான் சாடல்

பினாங்கு தென்பகுதி கடல்மீட்புத் திட்டம்(பிஎஸ்ஆர்) தொடர்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மீனவர்களைச் சந்தித்துப் பேசியது “வெறும் நாடகம்” என்றும் மீனவச் சமூகத்தவருக்கு உதவும் நோக்கம் அவருக்குத் துளியும் இல்லை என்றும் கெராக்கான் கட்சி சாடியுள்ளது.

மலேசியாகினியிடம் பேசிய கெராக்கான் துணைத் தலைவர் ஓ தொங் கியோங் அச்சந்திப்பில் அன்வார் பேசிய பேச்சில் உண்மை இல்லை என்றார்.

பிஎஸ்எம் அமலாக்கப்படும்வேளையில் மீனவர்களுக்கு அவர்களின் நலன்கள் கவனித்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையைக்கூட பிகேஆர் தலைவர் கொடுக்கவில்லை என அச்சந்திப்பில் கலந்துகொண்ட கெராக்கான் பேராளர்கள் தெரிவித்ததாக ஓ கூறினார்.

“அன்வார் 30 நிமிடம் அங்கிருந்தார். ஆனால், மீனவர்களுடன் அதிக நேரம் செலவிடவில்லை”, என்றார்.

“அன்வார் பினாங்கு முதலமைச்சர் செள கொன் இயோவிடம் பேசுவதாக தெரிவித்தார் அவர் அன்வாரிடம் பேசுவதாக தெரிவித்தார். இருவரும் எத்தனை தடவைதான் பேசிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

“அன்வார் ஆறாவது பிரதமரானதும் திட்டத்தை மறு ஆய்வு செய்வேன் என்றாவது உறுதிமொழி கொடுத்திருக்கலாம், அது அவர் மீனவர்களுக்கு உதவ உண்மையிலேயே விரும்புகிறார் என்ற எண்ணத்தையாவது தந்திருக்கும்”, என்று ஓ சொன்னார்.