தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் பரிதாப நிலை; சீமான் அதிரடி அறிக்கை!

சந்தேகத்தின் பேரில் பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற இலங்கை அகதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற 34 ஈழத்தமிழர்களில் யோககுமார், குணசீலன், அருண் இன்பதேவர் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் வைத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

‘விடுதலை அல்லது கருணைக் கொலை இவையிரண்டில் எதையாவது ஒன்றைச் செய்யுங்கள்’ என்கிற கோரிக்கையை முன்வைத்து மூவரும் தொடர் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்திருப்பது பெரும் மனவேதனையைத் தருகிறது.

ஈழத்தாயகம் சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்கி முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்டச் சூழலில் தமிழர்களின் பெருத்தத் தாயகமானத் தமிழகத்தை நம்பி ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அடைக்கலம் புக வருகிறார்கள்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்கிற செம்மார்ந்தப் பெருமைக்குச் சொந்தம் கொண்டாடுகிற தமிழகம், சொந்த இன மக்களை சந்தேகத்தின் பேரில் இன்றுவரை அகதிகள் முகாமிலேதான் அடைத்து வைத்திருப்பது அவமானச் சின்னமாகும்.

இந்நிலத்திற்குத் தொடர்பேயற்ற திபெத்திய அகதிகள் கூட அனைத்து வித வசதி வாய்ப்புகளையும் பெற்று நல்வாழ்க்கை சூழலில் வாழ்கிறபோது, தொப்புள்கொடிச் சொந்தங்களான ஈழத்தமிழர்கள் அகதிகளாக இந்நிலத்தில் நடத்தப்படுவது ஒவ்வொரு தமிழருக்குமானத் தலைகுனிவாகும்.

மனிதர்கள் வாழ்வதற்குரிய எவ்வித வசதிவாய்ப்புகளோ, சுகாதாரம் பேணுவதற்குரிய அடிப்படைக் கட்டமைப்புகளோ எதுவுமற்ற அகதிகள் முகாமில் உளவுத்துறையினரின் சந்தேகப்பார்வையாலும், ஆளும் வர்க்கத்தின் தீராத இன்னல்களாலும் நாளும் பிணைக்கப்பட்ட ஒரு துயர்மிகுந்த வாழ்க்கையினையே ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் இம்மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.

அடைக்கலம் தேடிவரும் ஈழத்து உறவுகள் மீது பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதும், அவர்களை விடுவிக்காது வதைப்பதும், பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதுமானப் போக்குகள் பல ஆண்டுகளாக நடந்தேறி வருகின்றன.

அத்தகைய வதைகூடங்களாக விளங்குகிற சிறப்பு முகாம்களைக் களைந்து அவர்களுக்குரிய மறுவாழ்வினைப் பெற்றுத் தர வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாகப் பேசியும் அரசின் செவிகளில் அது ஏறுவதுமில்லை.

அதிகாரவர்க்கம் துளியும் மனமிறங்குவதுமில்லை. அதனைப் போல, சந்தேகத்தின் பேரில் பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற யோககுமார், குணசீலன், அருண் இன்பதேவர் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை தற்போது முழுமையாக நிறைவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோரிப் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அவர்களின் கோரிக்கை மிகத் தார்மீகமானது.

நியாயமானது. ஆகவே, அவர்களின் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-https://athirvu.in

TAGS: