வேள்பாரிக்கு எதிராக தமிழ் நேசன் முன்னாள் ஊழியர்கள் காவல்துறையில் புகார்

கடந்த பிப்ரவரியில் மூடப்பட்ட தமிழ் நேசன் பத்திரிக்கையின் முன்னாள் ஊழியர்கள், வாக்குறுதியளித்தபடி சம்பளம் வழங்கத் தவறியதற்காகவும், சொக்சோ மற்றும் இ.பி.ஃப். நிதியைக் கட்டத் தவறியதற்காகவும் அந்நிறுவனத்திற்கு எதிராக இன்று போலீஸ் புகார் செய்தனர்.

“சொக்சோ மற்றும் இ.பி.ஃப்.-காக, எங்கள் சம்பளப் பணத்தில் பிடித்தம் செய்துள்ளனர். ஆனால், சொக்சோவில் 39 மாதங்களும் இ.பி.ஃப்.-ல் 5 மாதங்களும் எங்கள் கணக்கில் பணம் சேர்க்கப்படாமலேயே இருந்துள்ளது,” என அந்நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் கே பத்மநாபன் சொன்னார்.

அவருடன் இன்று, தமிழ் நேசன் நாளிதழின் முன்னாள் ஊழியர்கள் சுமார் 40 பேர், கோம்பாக் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் புகார் செய்துள்ளனர்.

பிப்ரவரியில் மூடப்பட்டாலும், மார்ச் வரை சம்பளம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால், இதுவரை சம்பளப் பணத்தைத் தரவில்லை என்றும் கே பத்மநாபன் மேலும் கூறினார்.

“நாளிதழின் முன்னாள் துணை ஆசிரியர் டி சரளாதேவி, தொழிலாளர்களுக்கு RM1.4 மில்லியன் சம்பளம் வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது என முன்பு கூறினார், ஆனால் அந்த ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக இல்லை.

“எங்கள் பணத்தைச் செலுத்த, பத்திரிக்கை நிறுவனம் மூடப்பட்டதில் இருந்து 3 மாதங்கள் அவகாசம் கேட்டிருந்தனர். ஆனால், இப்போது 6 மாதங்கள் ஓடிவிட்டன, எந்தவொரு பதிலும் வரவில்லை,” என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பி.எஸ்.எம்.-ஐ நாடினர்

இன்று காலை, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் மற்றும் தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன் இருவரும் அவர்களுக்கு ஆதரவாக காவல்நிலையம் சென்றனர்.

பத்திரிக்கை நிறுவனம் மூடப்பட்டதால் வேலை இழந்த இந்த ஊழியர்களுக்கு, சம்பளப் பாக்கி, நியாயமான இழப்பீட்டுத் தொகை என எதுவுமே கொடுக்காமல், இந்நிறுவனம் அவர்களை ஏமாற்றி வருகிறது. அதுமட்டுமின்றி, சொக்சோ மற்றும் இ.பி.ஃப். தொகையும் முறையாக அவர்களின் கணக்கில் செலுத்தப்படாமல் இருந்துள்ளது. எனவே, இதனை வணிகவியல் குற்றப்பிரிவின் படி விசாரிக்க வேண்டும் என சிவராஜன் சொன்னார்.

“நாட்டில் பிரபலமாக இருந்த இப்பத்திரிக்கை நிறுவனத்தின் இயக்குநர் குழுவில், ச சாமிவேலு, அவர்தம் மனைவி இந்திராணி மற்றும் மகன் வேள்பாரி ஆகியோர் இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

“இதுவரை நேர்மையாகப் பணியாற்றிய இந்த ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.

அண்மையில், அப்பத்திரிக்கையின் ஊழியர்கள், பி.எஸ்.எம். உதவியை நாடியதாக அவர் சொன்னார். அதன் அடிப்படையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாவும் சிவராஜன் தெரிவித்தார்.

1924-ம் ஆண்டு முதல், வெளிவரும் தமிழ் நேசன் பத்திரிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக நட்டத்தில் ஓடுவதால், அதனை மூடப்போவதாக, அதன் நிர்வாக இயக்குநர் எஸ் வேள்பாரி கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ் வேள்பாரியைத் தொடர்பு கொண்டபோது, இப்பிரச்சனையைத் தமது வழக்கறிஞர்கள் கையாள்வதாக அவர் தெரிவித்ததாக, கடந்த 35 ஆண்டுகளாக புகைபடக் கலைஞராக பணியாற்றிய எஸ்.எம். சுந்தர் கூறினார்.

பிப்ரவரியில், இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண, அவர்கள் மனித வள அமைச்சர் குலசேகரனையும் சந்தித்துள்ளனர்.