நீரில் டீசல் கசிந்திருப்பதை செமஸ்டா உறுதிப்படுத்தியது: கீழறுப்பு வேலையா?

சிலாங்கூரில் மணல் எடுப்பதற்குச் சலுகை பெற்றுள்ள கும்புலான் செமஸ்டா சென்.பெர்ஹாட், நேற்று சுங்கை சிலாங்கூர் ஆறு மாசடைந்ததற்கு நீரில் டீசல் கலந்ததுதான் காரணம் என்பதை உறுதிப்படுத்தியது.

அதன் விளைவாக சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் 1.2,3 -உம் ரந்தாவ் பாஞ்சாங் ஆலையும் நேற்று மாலை ஆறு மணிலிருந்து இரவு 8.15வரை மூடப்பட்டன.

மூடப்பட்ட அவை இன்று அதிகாலை மணி 3.30க்கு மீண்டும் செயல்படத் தொடங்கியதாக ஸபாஷ் அறிக்கை ஒன்று கூறியது.

“கும்புலான் செமஸ்டா சுங்கை சிலாங்கூரில் ஹங் துவா ஏரிக்கருகில் ஜூலை 21 மாலை மணி 6.15 அளவில் நீரில் டீசல் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தது”, என அவ்வறிக்கை கூறிற்று..

செமஸ்டாவின் மூத்த பொது உறவு அதிகாரி அப்துல் வகாப் நோர்டின் இன்று விடுத்த ஓர் அறிக்கையில், “சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு உடனடியாக பணியாளர்களை அனுப்பி டீசல் கசிவுக்கான காரணத்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்தினோம்”, என்றார்.

செமஸ்டா தொடர்ந்து நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் சொன்னார்.

“டிசல் கசிவு ஏற்பட்டது எப்படி என்பதைப் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்து வருகிறோம். கீழறுப்பு வேலையாக இருக்குமோ என்றுகூட ஆராய்கிறோம்”, என்றாரவர்.