பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரின் நிலை இனி என்னவாக இருக்கும்? – விளக்குகிறார் ஏ.ஜி.நூரணி

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது.

மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், 61 வாக்குகள் எதிராகவும் பதிவாகியிருந்தன.

இது தொடர்பாக அரசமைப்புச்சட்ட வல்லுநரும், அரசியல் பகுப்பாய்வாளர் மற்றும் வரலாற்று ஆய்வாளருமான ஏ.ஜி.நூரணியிடம் பிபிசி இந்தி சேவை செய்தியாளர் இக்பால் அகமது பேசினார்.

A G Nooraniபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஏ.ஜி.நூரணி

கேள்வி: நரேந்திர மோதி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உங்கள் எதிர்வினை என்ன?

பதில்: இதுவொரு சட்டவிரோத நடவடிக்கை. இது ஒரு மோசடிக்கு நிகரான செயல். ஷேக் அப்துல்லாவுக்கு என்ன நடந்ததோ அதேதான் இப்போது நடந்துள்ளது. (ஷேக் அப்துல்லா காஷ்மீரின் முதல் பிரதமர். அப்போது காஷ்மீர் தலைவர் அப்படிதான் அழைக்கப்படுவார்) அவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி 1953ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நேரு எடுத்த நடவடிக்கை அது. ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் அப்துல்லாவை கைது செய்துவிட்டு, பக்‌ஷு குலாம் முகம்மதுவை பிரதமராக நியமித்தார். அதேதான் இப்போதும் நடக்கிறது. அதனால்தான் காஷ்மீர் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேள்வி: நரேந்திர மோதியின் இந்த நடவடிக்கைக்குப் பின் முற்றாக சட்டப்பிரிவு 370ஐ ரத்து ஆகுமா?

பதில்: இது சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான முடிவு. சட்டப்பிரிவு 370 மிகத்தெளிவாக உள்ளது. அதை யாராலும் முடிவுக்கு கொண்டு வர முடியாது. அதனை அரசமைப்பு பேரவையால் மட்டும்தான் முடிவுக்கு கொண்டுவர முடியும். ஆனால், 1956ம் ஆண்டு அரசமைப்பு பேரவை கலைந்துவிட்டது. ஆனால், மோதி அரசு 370ஐ முடிவுக்கு கொண்டுவர எதை எதையோ செய்கிறது. இரண்டு முன்னாள் அமைச்சர்கள் தெளிவாக சொல்லிவிட்டனர். 370ஐ ரத்து செய்வது, காஷ்மீருக்கு இந்தியாவுடனான உறவை ரத்து செய்வதாக அர்த்தம் என்றனர். காஷ்மீரை இரண்டாக பிரிப்பது ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவு. அதனை இப்போது நிறைவேற்றிவிட்டனர்.

கேள்வி: காஷ்மீர் தொடர்பான ஐ.நாவின் முன்மொழிவில் அரசின் முடிவானது ஏதேனும் தாக்கத்தை செலுத்துமா?

பதில்: இல்லை. அதில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது.

கேள்வி: ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப்பேரவை, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரும் இந்தியாவின் பகுதி என ஏகமானதாக ஒரு முடிவை எடுத்தது. மோதி இன்று எடுத்துள்ள நடவடிக்கை அதில் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்துமா?

பதில்: சட்டப்பேரவை எடுத்த முடிவு சட்டபூர்வமானதாக இருக்கலாம். ஆனால், கள நிலவரம் வேறு. உங்களிடம் உள்ளதை நீங்கள் வைத்து கொள்ளுங்கள், எங்களிடம் உள்ளதை நாங்கள் வைத்து கொள்கிறோம் என நேருவே கூறி இருந்தார்.

kashmirபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி: அரசியல் ரீதியாக என்ன சாதிக்க விரும்புகிறது இந்த அரசு?

பதில்: மிகவும் தெளிவாக தெரிகிறது. ஓர் இந்து ராஷ்ட்ராவை பா.ஜ.க ஏற்படுத்த முயல்கிறது.

கேள்வி: அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்க முடியுமா?

பதில்: முடியும். ஆனால், நீதிமன்றம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்று தெரியாது. ஆனால், ஒன்றை மட்டும் என்னால் கூற முடியும் அரசின் திட்டம் அயோத்தி தொடர்பானதாக இருக்கும்.

கேள்வி: இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்: இது சட்டவிரோதமானது. ஏமாற்று செயல். காஷ்மீரிகளை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவையே அவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். கடந்த இரண்டு வாரமாக ஏதேதோ பொய் சொன்னார்கள். அரசு நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. இனி அரசு கூறுவதை யாரும் நம்பமாட்டார்கள். -BBC_Tamil

TAGS: