மலேசிய இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி கேட்கக்கூடாது

இந்தியாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டுவரும் இஸ்லாமியப் போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மலேசியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் கருத்துப்படி, மற்ற நாடுகள் நாயக்கிற்கான கதவுகளை மூடியுள்ளதால், மலேசியா அவரை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் அவருக்கு ஒரு நியாயமான விசாரணை நடக்காது என உணர்ந்ததால், நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டேன் என்று மகாதிர் கூறினார். ஆனால், ஒருசில வாரங்கள் அல்லது மாதங்களில், அவரின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்களை நம்மால் காண முடிந்தது.

எதிர்காலத்தில், நாயக்கிற்கு எதிராக இன்டர்போல் பிரச்சனைகளில் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டால், மகாதீர் தனது நிலைப்பாட்டை மாற்றுவாரா என்பது எனக்குத் தெரியவில்லை. காலம் பதில் சொல்லும்.

அண்மையில், பாஸ் அரசாங்கத்தின் சிறப்பு விருந்தினராக, கோத்தா பாரு, கிளாந்தானில் ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்த நாயக், சில நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு குரல்கொடுப்பதால், மகாதீர் இஸ்லாமிய உலகின் சிறந்த முஸ்லீம் தலைவர் எனப் பாராட்டினார்.

அதற்கும் ஒருபடி மேலே போய், சில முன்னாள் மேற்கத்திய தலைவர்கள் மலேசியாவில் அடையாளங்காணப்பட்டால், ஈராக் மற்றும் பிற முஸ்லீம் நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராகக் குற்றங்கள் புரிந்ததற்காக அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் பேசியுள்ளார்.

நாயக்கின் அதிகப்படியான புகழ்ச்சியால், மகாதீர் மகிழ்ச்சியடைவாரா அல்லது சங்கடப்படுவாரா என்பது எனக்குத் தெரியவில்லை.

நாட்டில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கும், நாயக்கை ஒப்படைக்க வேண்டும் எனும் இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வேண்டுகோளுக்கு, மகாதிர் செவிசாய்க்க மறுப்பதற்கும் காரணமாக, மகாதீரை நாயக் புகழ்ந்து பேசலாம். சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் எந்தவொரு நபரும், அது நாயக் அல்லது வேறு யாராக இருந்தாலும், சரணாலயத்தை வழங்கும் ஒரு தலைவருக்கு, இயல்பாகவே நன்றியுடையவராக இருப்பார்.

மலேசியாவில், முஸ்லிம் அல்லாதவர்கள் நாயக்கை எதிர்ப்பதற்குக் காரணம் அவர் சட்டத்திலிருந்து தப்பியோடி என்பதற்காகவோ அல்லது இஸ்லாம் குறித்த அவரது சொற்பொழிவுகளுக்காகவோ அல்ல, மாறாக மதங்களைப் பற்றிய அவரது குறும்புத்தனமான ஒப்பீட்டு முன்னோக்குகளுக்காக.

இந்த ஒப்பீட்டு முன்னோக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், நாயக் முஸ்லிம் அல்லாதவர்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தி, குறைத்து மதிப்பிட்டு, தேவையற்ற முறையில் அவர்களைக் கோபப்படுத்தியுள்ளார், இஸ்லாம் மதத்தைத் தவிர மற்ற மத நம்பிக்கைகளைச் சிறுமைபடுத்தியுள்ளார்.

இதுதான் பிரச்சினையின் அடிப்படை, ஏன் நாயக்கை மற்ற மதங்களைத் தொட அனுமதிக்கக் கூடாது, ஏனென்றால் மற்ற நம்பிக்கைகளை அவர் குத்தும் பையாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

கோத்தா பாருவில், அவர் மகாதீரைப் புகழ்ந்து பேசினார், இஸ்லாமிய உலகம் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அதேசமயம், மலேசிய இந்துக்களைப் புண்படுத்தும் ஒன்றையும் அவர் பேசிவிட்டார்.

மலேசியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களைத் தொட்டு பேச அவர் ஏன் விரும்பினார்? அவ்வாறு செய்யக்கூடாது என்று அவருக்கு போதுமான எச்சரிக்கை செய்யப்பட்டதா என்பது தெளிவாக இல்லை.

மலேசிய இந்துக்களை, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த அவர், மலேசியாவில் 100 விழுக்காட்டிற்கும் அதிகமான உரிமைகளை இந்துக்கள் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், மலேசிய இந்துக்கள் இங்குச் சிறப்பாக வாழ்ந்தபோதும், மகாதீரை விட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விசுவாசமாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.

இது குறும்புத்தனமான, அற்பமான கருத்து. மலேசிய நாட்டில் உள்ள இந்தியர்கள் அல்லது இந்துக்கள் பற்றி அவருக்கு என்ன தெரியும்? இந்த நாட்டை வளமாக்கவும் வளர்ச்சியடையச் செய்யவும், தோட்டப்புற, நகர்ப்புற இந்துத் தொழிலாளர்கள் செய்தத் தியாகங்கள் பற்றி அவருக்குத் தெரியுமா?

இந்துக்கள் நாட்டிற்கு விசுவாசமற்றவர்கள் என்று கூறுவது துரோகமல்லவா? 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இந்துக்கள் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு வாக்களித்ததை அவர் உணர்ந்துள்ளாரா?

நாட்டின் இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறை மலேசியர்கள். அவர்களின் விசுவாசம் குறித்து கேள்வி கேட்கக்கூடாது.

விசுவாசம் பற்றி கேள்வி எழுப்ப நாயக் யார்? அவரே இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லை. இந்தோனேசியாவை அடுத்து, உலகின் இரண்டாவது அதிக முஸ்லீம் மக்களைக் கொண்ட நாட்டிலிருந்து, அவர் ஏன் ஓடி வரவேண்டும்?

நாயக் தனது மதத்திற்கு உண்மையாக இருந்தால், அவர் மலேசியாவில் குழப்பங்கள் உருவாக்குவதை விட்டுவிட்டு, நாடு திரும்பி, இந்திய அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டும்.

இந்தியா, மக்கள்தொகையில் சுமார் 18 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்டுள்ளது, அவர்கள் ஒரு முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் இருப்பதை விட, இந்தியாவில் வாழ விரும்புகிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவது உண்மையானால், மலேசியாவில் அரச பாதுகாப்போடு, வசதியாக வாழ்வதை விட, இந்திய முஸ்லிம்களின் நலனைக் காக்க நாயக் இந்தியாவில் இருக்க வேண்டாமா?

மலேசியாவில் எப்படி தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டுமென, இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிவுறுத்தும் தகுதி நாயக்கிற்கு இல்லை. மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ள சலுகையை அவர் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

சில மலேசியர்கள், சுயநல காரணங்களுக்காக நாயக் தங்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது துரதிர்ஷ்டவசமானது. இறுதியில், அவரது செயல்களின் விளைவுகளை அனுபவிக்கப்போவது நாயக் அல்ல, மாறாக எல்லா மதங்களையும் சார்ந்த மலேசியர்கள்.

டாக்டர் பி ராமசாமி , பினாங்கு மாநிலத் துணை முதல்வர் II.

தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை