தான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69 பேர் கொல்லப்பட்டனர்

கசிந்த பெற்றோலைப் பெறுவதற்கு சனத்திரள் விரைந்த நிலையில் விபத்துக்குள்ளான எண்ணெய்த் தாங்கியொன்று வெடித்ததில் 69 பேர் தான்ஸானியாவின் பொருளாதாரத் தலைநகரமான டார் எஸ் சலாமுக்கு மேற்கு நகரமான மொரொகொரோவுக்கு அருகில் நேற்று கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தான்ஸானியா தொலைக்காட்சியின் ஒளிபரப்பில், தாங்கள் தற்போது 69 பேரின் இழப்பை நினைவுகூருவதாகத் தெரிவித்த தான்ஸானியாவின் பிரதமர் காஸிம் மஜலிவா, டார் எஸ் சலாமிலுள்ள தேசிய வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரால் கொண்டுசெல்லப்பட்டப்போது இறுதியாக உயிரிழந்தவர் இறந்ததாகவும் 66 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

மோசமாகப் பாதிக்கப்பட்ட 39 நோயாளர்கள் டார் எஸ் சலாமிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், 17 பேருக்கு மொரொகொரொவில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தின் காணொளியானது ட்ரக்கானது தீப்பிழம்பாலும், அடர்ந்த கறுப்பு புகையாலும், சிதிலமடைந்த சடலங்களாலும் சூழப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளது. எரிந்த மரங்களுக்கிடையே எரிந்து முடிவடைந்த மோட்டார் சைக்கிள் வாடகைக் கார்கள் காணப்படுகின்றன.

இதேவேளை, சமூகவலைத்தளத்தில் தரவேற்றப்பட்டுள்ள காணொளியொன்றானது மஞ்சள் கொள்கலன்களையுடைய டசின் கணக்கான மக்கள் ட்ரக்கைச் சுற்றியிருப்பது தெரிகிறது.

இந்நிலையில் மேற்குறித்த அனர்த்தத்தைத் தொடர்ந்து இன்றைய நாளை துக்க தினமாக தான்ஸானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி பிரகடனப்படுத்தியுள்ளார்.

கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகளில் பிரதமர் காஸிம் மஜலிவாவை ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார் என உத்தியோகபூர்வ அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

-http://tamilmirror.lk