கோமாளி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே தன்னுடைய சிறு சிறு வீடியோக்களால் கவனிக்கப்பட்டவர். ஒரு வித்தியாசமான கதை, திரைக்கதை, சரியான விகிதத்தில் நகைச்சுவை என வெற்றிகரமான ஃபார்முலாவோடு களமிறங்கியிருக்கிறார்.

1990களின் இறுதி. பள்ளிக்கூடத்தில் படிக்கும் ரவி (ஜெயம் ரவி), உடன் படிக்கும் நிகிதாவைக் (சம்யுக்தா ஹெக்டே) காதலிக்கிறான்.

அவனுடைய நண்பன் மணி (யோகி பாபு). ரவி நிகிதாவிடம் காதலைச் சொல்ல முயலும் தருணத்தில் நடக்கும் ஒரு விபத்தில், கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறான்.

கோமாளி - சினிமா விமர்சனம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு ரவி கண்விழித்துப் பார்க்கும்போது உலகமே மாறியிருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளத் தடுமாறுகிறான் ரவி. 16 ஆண்டுகள் ரவிக்குச் செய்யப்பட்ட மருத்துவச் செலவுகளால், அவனது குடும்பம் கடனில் தத்தளிக்கிறது.

அப்போதுதான் அவனது குடும்பத்திற்குச் சொந்தமான பழைய சிலை ஒன்று, அரசியல்வாதி ஒருவனிடம் இருப்பது தெரிகிறது. அந்த அரசியல்வாதியிடமிருந்து சிலையை மீட்டு, அதை விற்று கடனை அடைக்க நினைக்கிறான் ரவி. ஆனால், அது அவ்வளவு சுலபமாக இல்லை.

இந்தக் கதையை முடிந்த அளவுக்கு கலகலப்பாகவும் விறுவிறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார்கள். ஆனால், இரண்டாவது பாதி சற்று பொறுமையைச் சோதிக்கிறது.

பல காட்சிகள் நீண்டதாகவும் மிக மெதுவாகவும் நகர்கின்றன. குறிப்பாக, சிலையைத் திருடத் திட்டம்போடுவதற்காக நிகிதாவின் வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசும் காட்சியும் கர்ப்பிணிப் பெண்ணைக் கதாநாயகன் காப்பாற்றும் காட்சியும் ரொம்பவுமே நீளம்.

கோமாளி - சினிமா விமர்சனம்

ஜெயம் ரவிக்கு ஒரு குறிப்பிடத்தக்க படம் இது. நகைச்சுவைக் காட்சிகளில் யோகிபாபுவோடு போட்டியிடுமளவுக்கு பின்னுகிறார்.

சம்யுக்தா ஹெக்டே, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள். வெறும் பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளாமல், படம் நெடுக கதையோடு இணைந்து வருகிறார்கள் இருவரும்.

யோகி பாபு கதாநாயகனாக நடித்து அடுத்தடுத்து வெளிவந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில், இந்தப் படத்தில் ஒரு நல்ல நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் மீண்டிருக்கிறார் மனிதர்.

இந்தப் படத்தின் மற்றொரு ஆச்சரியம் சின்னச் சின்னப் பாத்திரங்களுக்குக்கூட சரியான நடிகர்களைத் தேர்வுசெய்து நடிக்க வைத்திருப்பது.

கோமாளி - சினிமா விமர்சனம்

ஓரிரு காட்சிகளே வரும் கதாநாயகனின் தந்தை பாத்திரத்தில் நரேன் நடித்திருப்பதும் சிறிய வாட்ச்மேன் வேடத்தில் ‘பிஜ்லி’ ரமேஷ் நடித்திருப்பதும் அந்தக் காட்சிகளின் மீதான ஆர்வத்தைத் தக்கவைக்கிறது.

ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசையும் பாடல்களும் உறுத்தாமல் கடந்து செல்கின்றன. சில சமயங்களில் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றன.

ஒரு ஜாலியான நகைச்சுவைப் படத்தைப் பார்க்க நினைப்பவர்கள் இந்தப் படத்தைத் தேர்வுசெய்யலாம்.

-BBC_Tamil