பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை – டொனால்ட் டிரம்ப்!

அடுத்த இரு ஆண்டுகளில் அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சில்லரை வர்த்தகம் சரிவு, சீனாவுடனான வர்த்தகப் போர், பணவீக்கம் குறைவு, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளின் பொருளாதார மந்த நிலை அபாயம், பிரெக்சிட் போன்ற காரணங்கள், அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வணிக பொருளாதார வல்லுநர்களுக்கான தேசிய கூட்டமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில், 2020 அல்லது 2021ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலையை அடையும் என்று 38 விழுக்காட்டினர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டே பொருளாதாரம் மந்தம் அடையும் என்று 226 நிபுணர்களில் 2 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியானது இந்த ஆண்டில் மேலும் குறிப்பிட்ட அளவுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்கக் கூடும் என்று 46 விழுக்காடு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதை மறுத்துள்ள அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப், பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று தனக்கு தோன்றவில்லை என்று கூறியுள்ளார்.

அரசானது மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், செழிப்பான நுகர்வோரைக் கொண்டிருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

-https://athirvu.in