செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?

ஆகஸ்ட் 14 ம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் முசாபராபாத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, உலகின் ஒன்றரை பில்லியன் முஸ்லிம்கள் காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றுபட்டுள்ளனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்சியாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, முஸ்லீம் நாடுகள் ஓரணியில் திரளவேண்டும் என இம்ரான் கான் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதற்கிடையில், செளதி அரேபிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய முதலீட்டை செய்யப்போவதாக முகேஷ் அம்பானி அறிவித்தார்.

செளதி அரசுக்கு சொந்தமான நிறுவனமான அரம்கோ, மன்னர் சல்மானால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, இந்த அறிவிப்பு இம்ரான் கானின் விருப்பத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

எண்ணெய் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட காலமும் இருந்தது. 1973 இல், இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை செளதி அரேபியா நிறுத்தியது. அமெரிக்காவும் இது குறித்து மிகுந்த கோபமடைந்தது. அதன்பிறகு, செளதி ஒருபோதும் எண்ணெயை ஆயுதமாக பயன்படுத்தவில்லை.

இம்ரான் கான் பெரும்பாலும் முஸ்லீம் உலகைக் குறிப்பிட்டு பேசுவார். ஆனால் முஸ்லிம் உலகம் என்பது யதார்த்தத்தில் ஒன்றும் இல்லை என்று செளதி அரேபியாவிற்கான இந்தியத் தூதராக இருந்த தல்மிஸ் அகமது கூறுகிறார்.

” முஸ்லீம் உலகம் என்று கூறும்போது, அனைத்து முஸ்லீம் நாடுகளும் இருக்கும் என்றும், ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றுபட்ட உலகம் இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், உலக அரசியலானது, லாபத்தின் அடிப்படையில் இயங்குகிறது, மத சமத்துவத்தின் அடிப்படையில் அல்ல” என்று அவர் கூறுகிறார்.

செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி, செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்தபோது, பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று அவரை வரவேற்றார். விமானத்தின் ஏணியில் இருந்து இறங்கிய பட்டத்து இளவரசரை பிரதமர் மோடி கட்டி அணைத்தார்.

பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த பட்டத்து இளவரரை முகேஷ் அம்பானி சந்தித்தார். அம்பானியின் விமானம் மும்பையில் இறங்கும்போது சல்மான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பின் போது, செளதி எண்ணெய் நிறுவனமான அரம்கோ மற்றும் முகேஷ் அம்பானியின் ஆர்.ஐ.எல் ஆயில்-டு-கெமிக்கல் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய நேரடி அன்னிய முதலீடு

செளதி அரேபியாவின் வர்த்தக அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்த அன்னிய நேரடி முதலீடு அதாவது 42 பில்லியன் டாலர். இது 2017 ஆம் ஆண்டில், 40 பில்லியன் டாலர்களாக இருந்தது.

கடந்த வாரம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி, ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான முகேஷ் அம்பானி, அதன் பங்குதாரர்களுடனான வருடாந்திர கூட்டத்தில், செளதி எண்ணெய் நிறுவனமான அரம்கோ, ஆர்.ஐ.எல்லி ஆயில்-டு-கெமிக்கலில் 20% முதலீடு செய்யப் போவதாக அறிவித்தார். இது இந்தியாவில் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு என்று வர்ணிக்கப்படுகிறது.

75 பில்லியன் டாலர் நிறுவனமான ஆர்ஐஎல் ஆயில்-டு-கெமிக்கலின் 20% பங்குகளை அரம்கோ வாங்க உள்ளது. அதாவது அரம்கோ 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யும்.

செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதே நிறுவனத்திடமிருந்து, 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 42 பில்லியன் டாலர்களும் 2019 இல் 15 பில்லியன் டாலர் முதலீடும் வந்துள்ளது. இது ஒரு மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, ரஷ்யாவின் ரோஸ் நேபிட் நிறுவனம் எஸ்ஸரின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் 12 பில்லியன் டாலர் முதலீடு செய்தது.

செளதி ஏன் இவ்வளவு பெரிய முதலீடு செய்தது?

உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான செளதி அரேபியாவிற்கும், மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோரில் ஒருவரான இந்தியாவுக்கும் இடையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் அரம்கோ ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு 111.1 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிய அரம்கோ, உலகின் மிக அதிக லாபம் ஈட்டும் நிறுவனம். முன்னதாக இந்த சாதனையை ஆப்பிள் ஐபோன் நிறுவனம் செய்திருந்தது. 2018 ஆம் ஆண்டில், ஆப்பிளின் வருவாய் 59.5 பில்லியன் மட்டுமே.

இதனுடன், மற்ற எண்ணெய் நிறுவனங்களான ராயல் டச்சு ஷெல் மற்றும் எக்ஸான் மொபிலும் இந்த பந்தயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. மறுபுறம், முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்காரர். அது மட்டுமல்ல, இந்தியாவில் அவரது வணிகம் பல பகுதிகளில் பரவி வருகிறது. எனவே, இருவரின் கூட்டணியும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, சவுதி ஏன் இந்தியாவில் இவ்வளவு முதலீடு செய்தது? இந்த முதலீடு யாருக்கு சாதகமாக உள்ளது? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எண்ணெய் துறையின் பொருளாதாரத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் மூத்த பத்திரிகையாளர் பரஞ்சய் குஹா டாகுர்தா, செளதி அல்லது வளைகுடா நாடுகளுக்கான ஒரே சந்தை ஆசியா என்பதை சுட்டிக் காட்டுகிறார். மேற்கத்திய நாடுகளில் எண்ணெய் சந்தை சுருங்கி வருவதாக கூறும் அவர், இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் இவ்வளவு பெரிய முதலீடு செய்வது ஆச்சரியமல்ல. அதே நேரத்தில், இந்தியாவிற்கும் இது சாதகமாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

“ஜாம்நகரில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆலை தான், உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்” என்பதை பரஞ்சய் குறிப்பிட்டுச் சொல்கிறார். இந்தியா 80 சதவிதத்திற்கும் அதிகமான எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதில் பெரும் பகுதி மேற்கு ஆசியா மற்றும் வளைகுடாவிலிருந்து வருகிறது. எனவே இது ஒரு நீண்டகால உறவாக இருக்கும். எண்ணெய் இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல், ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எண்ணெய் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அதே நேரத்தில், தல்மிஸ் அகமது கூறுவதையும் கவனிக்க வேண்டும். “நாங்கள் எண்ணெய் வாங்கும் ஒரு நிறுவனத்துடன் நெருங்கிய உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம். இப்போது வரை எங்கள் உறவு வாங்குபவர் மற்றும் விற்பனையாளருடன் உள்ளது.

அதைத்தவிர, இங்குள்ள நிறுவனங்களிலும், இந்தியாவின் எண்ணெய் அல்லது பிற துறைகளிலும் முதலீடு செய்ய விரும்பினோம். வளைகுடா நாடுகளின் எண்ணெய் திட்டங்களில் எங்கள் நிறுவனங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் விரும்பினோம் என்று அவர் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.

“எங்கள் திட்டத்தின் படி, அரம்கோவுடன் வணிக கூட்டாண்மை பற்றி முடிவு செய்தோம். ரிலையன்ஸ் செளதியிலிருந்து நிறைய எண்ணெயை வாங்குகிறது. அதோடு, ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கச்சா எண்ணெயில் பாதிக்கும் மேற்பட்டது செளதி அரேபியாவிலிருந்து வருகிறது. தற்போதைய ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரு நிறுவனங்களின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த ஒப்பந்தத்தை நாம் முழுமையாக வரவேற்க வேண்டும், என்கிறார் அவர்.

உலகளாவிய எண்ணெய் பொருளாதாரத்தில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் முக்கியமான ஒரு விஷயம். எண்ணெய் விஷயத்தில் அமெரிக்கா தன்னிறைவு அடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது. கடந்த 75 ஆண்டுகளில் இது முதல்முறையாக நடந்தது, ஏனென்றால் இதுவரை அமெரிக்கா வெளிநாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியையே நம்பியிருந்தது.

செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ, வடக்கு டகோட்டாவில் உள்ள பேக்கன் மற்றும் பென்சில்வேனியாவின் மார்செல்லஸ் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான எண்ணெய் கிணறுகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக உலகெங்கிலும் எண்ணெய் அரசியலின் மையமாக ஒபெக் அமைப்பு இருந்து வருகிறது. ஆனால் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் வளர்ந்து வரும் எண்ணெய் உற்பத்தி ஒபெக்கின் ஆதிக்கத்திற்கு சவால் விடுவது உறுதி. இதுபோன்ற பல காரணங்களால், எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக் பலவீனமடைந்துள்ளது.

அமெரிக்காவின் சுயாதீன எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனமான ரிஸ்டாட் எனர்ஜியின் 2016 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, அமெரிக்காவில் 264 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு உள்ளது என்று கூறியுள்ளது. தற்போதுள்ள எண்ணெய் இருப்புக்கள், புதிய திட்டங்கள், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளங்கள் மற்றும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் கிணறுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

ரஷ்யா மற்றும் செளதியை விட அமெரிக்காவில் அதிக எண்ணெய் இருப்பு இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஸ்டாட் எனர்ஜியின் மதிப்பீடுகளின்படி, எண்ணெய் ரஷ்யாவில் 256 பில்லியன் பீப்பாய்கள், சவுதியில் 212 பில்லியன் பீப்பாய்கள், கனடாவில் 167 பில்லியன் பீப்பாய்கள், இரானில் 143 மற்றும் பிரேசிலில் 120 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு உள்ளது.

மேற்கு நாடுகளில் எண்ணெய் சந்தை இறக்குமதி குறைந்து, சுருங்கி வருவதாகவும் தல்மிஸ் அகமது கூறுகிறார். இந்த நிலையில், செளதியின் முழு கவனம் ஆசியாவிலேயே உள்ளது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஆசியாவில் அதிக எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.

செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

“எண்ணெய் விஷயத்தில் அமெரிக்கா தன்னிறைவு அடைந்துவிட்டது. எண்ணெய் தேவைப்படுபவர்கள், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து வாங்குகிறார்கள். மறுபுறம், ஐரோப்பாவிற்கான எண்ணெய் இறக்குமதியும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதற்கு காரனம், அவை எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், மேற்கு ஆசியாவின் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு ஆசியாவை விட பெரிய சந்தை இல்லை, ஆசியாவில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தை இல்லை. மேற்கு ஆசியாவின் மொத்த கச்சா எண்ணெயில் ஆசியாவின் பங்கு 62 சதவீதமாகும். சீனாவுக்குப் பிறகு, இந்தியா அவர்களுக்கு மிகப்பெரிய எண்ணெய் சந்தையாகும்.

இந்த ஒப்பந்தமானது ஒரு தரப்புக்கு மட்டும் நன்மையானது என்று சொல்ல முடியாது என்கிறார் எண்ணெய் வணிகம் சார் அறிஞரும் பாஜக தலைவருமான நரேந்திர தனேஜா. இது இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் ஒப்பந்தம் என்று அவர் கூறுகிறார். “அரம்கோ, ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெயை நீண்ட காலமாக கொடுக்கும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.” என்று கூறுகிறார் நரேந்திர தனேஜா.

“எண்ணெய் தொழில் என்பது உதயமாகும் சூரியன் அல்ல” என்று கூறும் தனேஜா, அது அஸ்தமிக்கும் சூரியன் என்றும் குறிப்பிடுகிறார். அடுத்த 20 ஆண்டுகளில், இந்தத் தொழிலுக்கு இன்றைக்கு இருக்கும் முக்கியத்துவம் இருக்காது என்று குறிப்பிடுகிறார். இப்போது எரிசக்திக்கான மாற்று ஆற்றல்களாக சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலை மேம்படுத்துவது அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், அணு ஆற்றலின் பங்களிப்பும் அதிகரிக்கும். எது எப்படியிருந்தாலும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செளதி அரேபியா கச்சா எண்ணெயை தொடர்ந்து வழங்கினால், அது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு நல்ல விஷயம் தான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்.

செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அரம்கோவின் முதலீட்டிற்குப் பிறகு, ரிலையன்ஸ் கடன் இல்லாத நிறுவனமாக வளரும் என்று முகேஷ் அம்பானி கூறுகிறார். ரிலையன்ஸ் ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சம் பீப்பாய்கள் எண்ணெயை அரம்கோவிடம் இருந்து வாங்கும், இது தற்போதைய கொள்முதலை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்க்து.

நீண்ட காலமாக, இந்தியா இராக்கில் இருந்து எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. செளதி எப்போதுமே இரண்டாமிடத்தில் தான் இருந்து வந்துள்ளது, ஆனால் ரிலையன்ஸ் மற்றும் அரம்கோ இடையேயான இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தியாவின் எண்ணெய் சந்தையில் செளதி மற்றும் ரிலையன்ஸ் ஏகபோக உரிமையைப் பெறுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் டாகூர்தா, “இருவருக்கும் இடையிலான ஒப்பந்தம் எவ்வளவு காலம் ஆகும் என்பதைப் பொறுத்தது இது. நிபந்தனைகள் என்ன என்பது இதுவரை தெரியாது. இந்த நிபந்தனைகள் ஒருபோதும் பொது வெளியில் வைக்கப்படாது. ஒரு விஷயம் என்னவென்றால், எதிர்வரும் காலங்களில், செளதி அரேபியா இந்தியாவுக்கு மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக இருக்கும். வெளிப்படையாக, இது இரானுக்கும் இராக்கிற்கும் நல்லதல்ல. செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான உறவு மிகவும் நன்றாக இருக்கிறது என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை இந்த நாம் பார்க்க வேண்டும். இது இரு நாடுகளின் நெருக்கத்திற்கான அறிகுறியாகும்.

பங்குச் சந்தைக்கு, அரம்கோவின் பங்குகளை கொண்டு வருவது குறித்து செளதி ஆலோசித்து வருகிறது. ஐந்து சதவீத பங்குகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அரம்கோ பங்குச் சந்தையில் பட்டியலிட விரும்பினால், அது எண்ணெய் இருப்பு பற்றிய தகவல்களைப் பகிர வேண்டும்.

இருப்பினும், அரம்கோ பங்குச் சந்தைக்கு வந்தாலும், அதனிடம் இருந்து அதிக வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது. செளதியில் எண்ணெய் இருப்புக்களின் அளவு மற்றும் அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதும் இன்னும் புதிராகவே உள்ளது.

செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அரம்கோவுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் பற்றி பேசும் நரேந்திர தனேஜா, “செளதி இவ்வளவு பெரிய தொகையை இந்தியாவில் முதலீடு செய்தால், அது எந்தவொரு முக்கியமான பிரச்சினையிலும் இந்தியாவுக்கு எதிராகப் போகாது” என்பதை குறிப்பிடுகிறார். அது காஷ்மீரின் விஷயமோ அல்லது வேறு எந்த விவகாரமாக இருந்தாலும் சரி. இந்தியாவில் 50 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது செளதி என்ற விஷயம் நட்புக்கு அப்பாற்பட்டது. இராஜதந்திரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு அடிப்படையில் இது மிகவும் நல்லது. இந்தியாவில் ரிலையன்ஸ் பெட்ரோல் பம்புகளிலும் அரம்கோ பங்கு எடுத்துக் கொள்ளும். அதாவது, எதிர்காலத்தில், அரம்கோவின் பெட்ரோல் பம்புகள் இந்தியாவிலும் செயல்படும்.

இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியாளர், ஆனால் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்யும் நாடு.

“இந்தியா 106 நாடுகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்கிறது” என்று கூறுகிறார் நரேந்திர தனேஜா. ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 103 நாடுகளுக்கு பெட்ரோலியம் மற்றும் டீசல் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெட்ரோல், டீசல் மற்றும் டர்பைன் எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா. இங்கிருந்து, பெட்ரோல், டீசல் மற்றும் டர்பைன் எரிபொருள்கள் ஜெர்மனி, ஜப்பான், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு விற்கப்படுகின்றன. சுத்திகரிப்பு நடைமுறையில் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக வளர்ந்த நாடுகள், சுத்திகரிப்பு நிலையங்களை தங்கள் நாடுகளில் நிறுவ விரும்பவில்லை என்பதும் இதற்குக் காரணம்.

செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கிழக்கு நோக்கிய கொள்கையின் கீழ், அரம்கோ ஆசியாவில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும், இந்தியாவைப் பற்றி மட்டுமே அது அக்கறை கொள்ளவில்லை என்கிறார் கூறுகிறார் தனேஜா. “இது எதிர்கால திட்டங்களின் அடித்தளம். எண்ணெயின் எதிர்காலம் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. வரவிருக்கும் 20 ஆண்டுகளில், வளைகுடா நாடுகளே தங்கள் எண்ணெயை எங்கு விற்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவர் குறிப்பிடுகிறார்.

பைனான்சியல் டைம்ஸிடம் பேசிய ரிலையன்ஸ் நிர்வாக இயக்குனர் பி.எம்.எஸ் பிரசாத், “எங்கள் உள்நாட்டு இருப்பு மிகவும் வலுவானது, எங்கள் கூட்டாளிகள் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று கூறினார். கடனைக் குறைப்பதும் செளதி – அரம்கோ ஒப்பந்தத்தின் முக்கியமான ஒரு அம்சமாகும். உண்மை என்னவென்றால், கடனை திருப்பிச் செலுத்த வேண்டாம் என்பதற்கான உத்தி ரீதியிலான ஒப்பந்தம் இது என்றும் பார்க்கலாம்.

கடன் சுமை காரணமாக, தனது தம்பி அனில் அம்பானி சிறைக்குச் செல்லமல் காப்பாற்றினார் முகேஷ் அம்பானி. அரம்கோவுடனான ஒப்பந்தமானது, தொலைநோக்குப் பார்வையில் முகேஷ் அம்பானி எடுத்த முடிவு என்று வணிக உலகில் கருதப்படுகிறது. -BBC_Tamil

TAGS: