பணிஓய்வு வயது : ஆராயாமல் பிரதமர் நிராகரித்தார், எம்.டி.யூ.சி. வருத்தம்

பணிஓய்வு வயதை 60-லிருந்து 65-ஆக உயர்த்த வேண்டும் எனும் திட்டத்தை ஆராயாமல் பிரதமர் நிராகரித்துவிட்டார் என வருத்தம் தெரிவித்த மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி.), ஓய்வூதியம் பெறுவோரின் பிரச்சினையைத் தீர்க்க மாற்று வழியை முன்மொழியுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

எம்.டி.யூ.சி.-யின் செயலாளர் ஜெ சோலமன், எந்தவொரு ஆய்வும் செய்யாமல், தொழிலாளர்களின் கருத்தைச் செவிமடுக்காமல் பிரதமர் அத்திட்டத்தை நிராகரித்துவிட்டார் என்றார்.

“குறைந்தபட்ச சம்பளம் – பற்றாக்குறை, உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம், குறைந்த ஈ.பி.எஃப். சேமிப்புத் தொகை இவற்றையெல்லாம் கையாள மாற்று வழியை வழங்காமல், மகாதிர் இத்திட்டத்தை நிராகரித்தது எங்களுக்கு வருத்தமளிக்கிறது,” என்று சோலமன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இத்திட்டம் அமலுக்கு வந்தால், இளைய தலைமுறையினர் வேலைவாய்ப்பைப் பெறுவது கடினமாகிவிடும், மேலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் எனும் மகாதிரின் விளக்கத்தைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சோலமன் சொன்னார்.

“இது ஒரு தவறான தர்க்கம், ஏனென்றால், வயதான பல தொழிலாளர்கள் சிறந்த அனுபவங்களைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் கடினமாக உழைக்கவும் செய்கின்றனர்.

“நிச்சயமாக அவர்களில் சோம்பேறிகளும் இருக்கிறார்கள், ஆனால் சோம்பேறிகள் இளைய தலைமுறையினரிடையேக் கூட உள்ளனர். சோம்பல் ஒருவரின் நடத்தை, அது வயதுக்கு அப்பாற்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

இளையத் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் எனும் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சிட்டிக்கின் கூற்று அர்த்தமற்றது என்ற சோலமன், இன்று பல இளைஞர்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்குக் குறைந்த சம்பளமே காரணம், வாய்ப்பு கிடைக்காததால் அல்ல என்றார்.

குறைந்த ஊதியத்தினால்தான், இளைஞர்கள் பலர் வேலை தேடி, வெளிநாட்டுக்குச் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

“இளைஞர்கள் மத்தியில் அவர் பிரபலமாக விரும்புகிறார், ஆனால் குறைந்த ஊதியம், அதிக வாழ்க்கைச் செலவினம் மற்றும் ஈ.பி.எஃப்.-பில் போதுமான சேமிப்பு இல்லாமை ஆகியவற்றால் தினமும் போராடும் பி40 மற்றும் எம்40 குழுக்களில் உள்ள தொழிலாளர்களைத் தியாகம் செய்வதன் மூலம், அவர் அதனை அடைய முயற்சிக்கக் கூடாது,” என்று அவர் கூறினார்.

தனியார் நிறுவனங்களில் பெரும்பாலான முதலாளிகள், செலவுகளைக் குறைப்பதற்காக, ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் காலியிடங்களை நிரப்புவதில்லை என்றும் சோலமன் கூறினார்.

குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாகவும் சைட் சிட்டிக்கை சோலமன் விமர்சித்தார்.

“தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்றபோதிலும், குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் RM1,800 ஆக உயர்த்துமாறு எம்.டி.யூ.சி. அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தபோது, சைட் சிட்டிக் வெறுமனே வாய்மூடிக் கிடந்தார்,” என்றும் அவர் கூறினார்.

தனது முடிவை மகாதீர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் சோலமன் கேட்டுக்கொண்டார்.

“2020-க்கான பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்பதால், அதற்கு இன்னும் தாமதமாகவில்லை,” என்று அவர் கூறினார்.