பிஎஸ்எம் : ‘குறைந்தபட்ச சம்பளத்தை மறுஆய்வு செய்ய புதிய உத்திகள் தேவை’

மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) தேசியத் தலைவர், டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார், மற்ற ஆசிய நாடுகளுக்கு ஒப்ப, குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த, அதனை மறுஆய்வு செய்யவேண்டும் என அரசாங்கத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றிரவு, செராஸ்சில், ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், ஆசிய சுதந்திர வர்த்தகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) 77 குழுவினரின் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் இலாபம் ஈட்டும் வகையில், சம்பளம் உயராமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது என்றார்.

இதற்குக் காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, மலேசியா ஒரு குறைந்த ஊதிய பொருளாதார நாடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திடீரென ஊதியம் அதிகரித்தால், அவர்கள் தங்கள் வணிகத்தை வேறு நாட்டிற்கு இடம்மாற்றக் கூடும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

“நமது முழு தொழில்மயமும் குறைந்த ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் அந்த அமைப்பு முறையில் சிக்கியுள்ளோம்,” என்றார் அவர்.

ஊதிய உயர்வு ஏற்பட்டால், நாடு குறிப்பிடத்தக்க நேரடி முதலீடுகளை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

“அதிலிருந்து வெளியேற, நாம் முழுவதையும் மாற்றி அமைக்க வேண்டும்.

மலேசியர்களில், ஏறக்குறைய 70 விழுக்காட்டினர், பல்வேறு பொருளாதாரத் துறைகளில் ஊதியம் பெறும் தொழிலாளர்கள்.

கடந்த ஆண்டு, தனது தேர்தல் அறிக்கையில், அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியத்தை RM1,500-ஆக உயர்த்துவோம் என்று பக்காத்தான் ஹராப்பான் உறுதியளித்தது.

இருப்பினும், 2019 பட்ஜெட்டில், நிதியமைச்சர் லிம் குவான் எங், குறைந்தபட்ச ஊதியத்தை RM1,100-ஆக உயர்த்துவதாகவே அறிவித்தார்.