வெறுப்பூட்டும் பேச்சு சிக்கல்கள் : இங்கிலாந்து எம்பி-யிடம் கற்றுக்கொள்ளுங்கள் – சார்லஸ்

வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் முஸ்லீம் பெண்கள் புர்தா (புர்கா) பயன்படுத்துவதைக் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிராகத், தைரியமாகக் கண்டனக் குரல் எழுப்பிய ஒரு தொழிற்கட்சி எம்.பி.யிடமிருந்து, மலேசிய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கூறினார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான தன்மஞ்சீத் சிங் தேசி, கடந்தாண்டு, தி டெய்லி டெலிகிராப்-பில் எழுதிய ஒரு கட்டுரைக்காக, ஜான்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை வைத்தார்.

டென்மார்க்கில் புர்தா பயன்படுத்துவதற்கான தடை குறித்து ஜான்சன் கருத்துத் தெரிவித்தார். அவர் அதனை அதிகப்படியானதாகக் கருதுவதாகக் கூறினாலும், முஸ்லீம் பெண்கள் “ஒரு அஞ்சல் பெட்டி போல எங்கும் செல்லத் தயாராக உள்ளனர்” என்றும் புர்தா அணிந்த பெண்கள் “வங்கிக் கொள்ளையர்கள்” போல தோற்றமளிப்பதாகவும் அதில் கூறியிருந்தார்.

ஜான்சன் தனது கட்டுரைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என தன்மஞ்சீத் சிங் நாடாளுமன்றத்தில் பேசியதை, நேற்று கிள்ளான் எம்பி சார்லஸ் தனது டுவிட்டரில் பதிவேற்றி இருந்தார்.

“சிறப்பாக இருந்தது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வெறுப்பூட்டும் குற்றம் குறித்த விவாதத்தை அனைவரும் பார்க்க வேண்டும்,” என்று சார்லஸ் கூறியிருந்தார்.

பின்னர் மலேசியாகினியுடன் பேசிய அந்த டிஏபி எம்பி, இன மற்றும் மத உணர்வுகள் நீண்ட காலமாக மலேசிய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

“முன்பு, நாம் அம்னோ-பிஎன் மீது குற்றம் சொன்னோம், ஆனால், இப்போது அது பக்காத்தான் ஹராப்பானிலும் நடக்கிறது. துரதிருஷ்டவசமாக, இந்த இரு தரப்பைச் சார்ந்த சில அரசியல்வாதிகள், தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துகொள்ள அல்லது அவர்களுக்கான அரசியல் ஆதரவை ஈர்க்க, இதனை ஓர் ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

இது பொறுப்பற்ற செயல் என்று சார்லஸ் விவரித்தார், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தேசிய ஒற்றுமையை உடைப்பதில் ஈடுபடுவோரை அரசாங்கம் எச்சரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சீக்கியத் தலைப்பாகை அணிந்தவர்களுக்கு எதிரான பாகுபாட்டின் அனுபவத்தை எடுத்துக்கூறி, வெறுக்கத்தக்க பேச்சுக்குக் கண்டனம் எழுப்பிய தம்மன்ஜீத்தை, இங்கிலாந்து எம்பி-க்கள் பாராட்டியுள்ளனர்.