‘ஓராண்டு கடந்துவிட்டது, நாட்டின் கல்வி தரத்தை பிஎச் எவ்வளவு தூரம் மேம்படுத்தியுள்ளது’, ஆர்வலர் கேள்வி

தேசியப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துவிட்டது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கண்டித்ததைத் தொடர்ந்து, பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், பள்ளிகளில் கல்வித் தரம் குறித்து கலாச்சார ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசியத் தேசிய நிலையிலான ஆராய்ச்சி மற்றும் ஆவண மையத்தின் (மரபுரிமை) நிறுவனர் எட்டின் கூ, நாட்டின் கல்வி முறையில் ‘எரிச்சல்’ கொண்ட பலர், இப்போது அதில் பெரிய மறுசீரமைப்பு ஒன்றைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளார்.

“ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், பாடப்புத்தகங்கள், தேசியக் கல்விக் கொள்கை நிலைகள், தேசிய மொழியாகவும் அறிவு மொழியாகவும் மலாய் மொழி என எதனைப் பற்றிய விவாதங்களும் இதுவரை நடைபெறவில்லை.

“பாடப் புத்தகங்களில் பல தகவல்களில் உண்மை இல்லை. தேர்வில் முட்டாள்தனமானக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது யாருடைய வேலை?

“பிரச்சினை மிகவும் சிக்கலானது என்பது நமக்குப் புரிகிறது. ஆசிரியர் பயிற்சி, கல்லூரி பிரச்சினைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் எனப் பல சிக்கல்களை நாம் கையாள வேண்டியுள்ளது.

“அனைத்தையும் ஆய்வு செய்து, மறுசீரமைக்க வேண்டும்,” என அவர் தெரிவித்ததாக ஃப்ரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 22-ம் தேதி, தேசியப் பள்ளிகளில் இஸ்லாம் மதப் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அப்பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்கள் வேலை வாய்பிற்கு உதவக்கூடியப் பிறப் பாடங்களில் பின் தங்கி விடுவதாக மகாதிர் கூறியிருந்தார்.

ஆசிரியர்களும் பாடத்திட்டங்களும், மத மற்றும் பிற பாடங்களைச் சமநிலைப்படுத்தத் தவறியதால், தேசியப் பள்ளிகளில் கல்வியின் தரம் ஓரளவு குறைந்துவிட்டதாக மகாதீர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்றப் பிரச்சினைகளால், தேசியப் பள்ளிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றார் எட்டின்.

மேலும் கூறுகையில், “இதில் இன்னும் மோசமானது என்னவென்றால், தேசியப் பள்ளிகளைத் தவிர்த்து, சர்வதேசப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சீனத் தனியார் பள்ளிகள், தேசிய வகை தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் எனப் பல்வேறு பள்ளிகள் இயங்க நமது கல்வி முறை அனுமதித்துள்ளது,” என்றார் அவர்.

“நமது அமைப்பில் எல்லாம் உள்ளதால், ஒரு குறிப்பிட்ட வகைப் பள்ளியால் நாட்டிற்கு பிரச்சினை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டுவது அல்லது அனைத்து மாணவர்களும் ஒரே நீரோட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டுப்படுத்துவது என்பது தேசியக் கல்வி முறைமையில் இருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை இயலாத ஒரு காரியமாகும்,” என்றார் எட்டின்.

“தேசியப் பள்ளிகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற சொல்லாட்சியில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குடியுரிமையைப் பொறுத்தவரை, அந்தக் கொள்கை நல்லது, ஆனால் ஒரு பெற்றோராக, என் குழந்தைகள் தேசியப் பள்ளிகளில் சரியான கல்வியைப் பெறுவார்கள் என்று நான் நம்பவில்லை என்றால், அவர்களை அங்கு அனுப்பலாமா, வேண்டாமா என்று தேர்வு செய்யும் உரிமை எனக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.

-ஃப்ரி மலேசியா டுடே