பிரதமர்: அரசாங்கம் அரசமைப்புப்படியான முடியாட்சியையும் மலேசியர்களின் உரிமைகளையும் கட்டிக்காக்கும்

அரசாங்கம் எப்போதுமே மாமன்னருக்கு உரிய மதிப்பளிக்கும் மாமன்னர் என்னும் அமைப்பைக் கட்டிக்காக்கும். இன்று, மாட்சிமை தங்கிய மாமன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இதைத் தெரிவித்தார்.

“அரசாங்கம் அரசமைப்புப்படியான முடியாட்சிக்கு என்றும் மதிப்பளிக்கும் அதைக் கட்டிக்காக்கும்.

“அதேபோன்று கூட்டரசின் சமயம் என்ற இஸ்லாத்தின் நிலையும் மலாய்க்காரர்கள், சாபா, சரவாக் மக்களின் சிறப்புரிமைகளும் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இனங்களின் சட்டப்பூர்வ உரிமைகளும் பாதுகாக்கப்படும்”, என்றாரவர்.

“தவிர, நாடு எல்லாவகை ஊழலிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். அப்போதுதான் முன்னிலும் சிறந்த முறையில் புதிய மலேசியாவை உருவாக்க முடியும்.”, என்றார்.

புத்ரா ஜெயா நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவரிடையே ஒற்றுமையை வலுப்படுத்த விரும்புகிறது என்று கூறிய மகாதிர், மக்களும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் மிரட்டல்களைச் சமாளிக்கும் பக்குவம் பெற்றவர்களாக விளங்குகிறார்கள் என்றார்.

“மாமன்னரின் அரசாங்கம் ஒற்றுமையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதுடன் பல்லின நல்லிணக்கம் கட்டிக்காக்கப்படுவதை உறுதிப்படுத்த பொறுப்பாக செயல்பட்டு வரும்”, என்றும் அவர் சொன்னார்.