அம்னோ- பாஸ் சாசனத்தில் உங்களுக்குத்தான் எத்தனை ஆர்வம்- முஜாஹிட்டைக் கிண்டலடிக்கிறார் அனுவார் மூசா

அமனா உதவித் தலைவர் முஜாஹிட் யூசுப் ராவா, அம்னோ-பாஸ் சாசனம் பற்றி விமர்சிப்பதில் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக் கூடாது என்று கூறுகிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா.

“சாசனம் பற்றி முஜாஹிட் எழுதுவதைப் பார்க்கையில் அவருக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்ற கேள்வி எழுகிறது.

“சாசனம் பற்றி அறியாமலேயே அதை விமர்சிக்க முயன்றுள்ளார், அதற்கு எதிர்மறையான மதிப்பீட்டைக் கொடுத்திருக்கிறார்”, என்று அனுவார் ஓர் அறிக்கையில் சாடினார்.

முஜாஹிட் இரண்டு நாள்களுக்குமுன் முகநூலில் இட்டிருந்த நீண்ட பதிவை வைத்துத்தான் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

அப்பதிவில் முஜாஹிட் கூறியிருந்ததெல்லாம் வெறும் ஊகங்கள்தான் என்று கெர்தே எம்பியுமான அனுவார் கூறினார்.

“அம்னோவும் பாஸும் நேற்று முளைத்த கட்சிகள் அல்ல. ஒரு கூட்டணி அமைத்தால்தான் வாழ முடியும் என்ற நிலையில் உள்ள சிறு கட்சிகளும் அல்ல”, என்றவர் அமனாவை இடித்துரைப்பதுபோல் கூறினார்.

இரு கட்சிகளுக்கும் தனித் தனித் திட்டங்கள் உண்டு. உரிய நேரம் வரும்போது அவை வெளிப்படுத்தப்படும்.

“சாசனம் என்பது அம்னோ அல்லது பாஸுன் உயிர்வாழ்வுக்காக செய்துகொள்ளப்படும் ஒன்றல்ல. உயிர்வாழ்தல் என்றால் பக்கத்தான் ஹரப்பானில் அமனாவும் பெர்சத்துவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனவே அப்படி வாழ்வதல்ல. அம்னோ மற்றும் பாஸின் பாதையே வேறு”, என்றார் அனுவார்.