பழங்குடியினர் மரண அறிக்கையை, சுகாதார அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பிப்பார்

கம்போங் கோல கோவில், 15 பழங்குடியினரின் மரணம் குறித்த முழு அறிக்கையை, எதிர்வரும் செப்டம்பர் 18-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் டாக்டர் ஜில்கிப்ளி அகமட் முன்வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாடாளுமன்ற விவாதத்திற்குப் பிறகுதான், அறிக்கையின் தகவல்கள் குறித்து அமைச்சர் ஊடகங்களுக்கு அறிவிப்பார். அன்று பிற்பகலில், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை அமைச்சர் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அமைச்சரின் உதவியாளர் கூறினார்.

முன்னதாக, மலேசிய மருத்துவச் சங்கக் கூட்டமைப்பின் (எஃப்.பி.எம்.பி.ஏ.எம்) தலைவர் டாக்டர் ஸ்டீவன் ச்சோ, மலேசியாகினிக்கு தனது அனுபவத்தை விவரித்தார்.

மே 2 முதல் ஜூன் 7-ம் தேதி வரை, பாத்தேக் இன பழங்குடி மக்கள் இறந்ததற்குத், தட்டம்மை காரனம் அல்ல என்று ச்சோ பலமுறை மறுத்துள்ளார்.

மேலும், அவர்களின் மரணத்தில், ஏதோ ஒன்றை அரசாங்கம் மறைக்க முயல்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

“பின் தங்கிய அந்த மக்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள்.’

“தோட்ட மேம்பாட்டிற்காக அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அதன்பின்னர், காடுகளை அழித்து, அவர்களுக்கும் காடுகளுக்கும் மத்தியிலான உறவு துண்டிக்கப்பட்டு, சொந்தமாக வாழ முடியாத நிலையில் அவர்கள் கைவிடப்படுகின்றனர்,” என்று ச்சோவ் கூறினார்.

முந்தைய அறிக்கையில், கம்போங் கோல கோவைச் சுற்றியுள்ள 5 நீர் ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வில், அந்நீர் அசுத்தமானதாகவும் நச்சுப் பொருட்கள் கலந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டது என்று கூறிய ச்சோ, அந்நீர் பயன்பாட்டுக்கு ஏற்றது அல்ல என்றும் தெரிவித்தார்.