மலேசியத் தூதர்: அது புகைமூட்டத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் கடிதம் அல்ல

 

இப்போதைய புகைமூட்டத்துக்கு இந்தோனேசியாதான் காரணம் என்று மலேசியா குற்றம் சுமத்தவில்லை, மாறாக அக்குடியரசில் பல இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்கு உதவிக்கரம் நீட்டத்தான் அது விரும்புகிறது.

இதை வலியுறுத்தும் கடிதமொன்றை அரசாங்கம் எரிபொருள், தொழில்நுட்ப, அறிவியல், வானிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ இன் மூலமாக இந்தோனேசியாவுக்குக் கொடுத்திருப்பதாக இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதர் சைனல் அபிடின் பக்கார் கூறினார்.

“கடிதத்தில் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை, புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் உதவும் மலேசியாவின் நோக்கம்தான் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது”, என்றவர் நேற்றிரவு ஜாகார்த்தாவில் 2019 மலேசிய தேசிய நால் கொண்டாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மலேசியாவின் புகைமூட்டத்துக்கு இந்தோனேசியாதான் காரணம் என்று குற்றஞ்சாட்டி அதற்குக் கண்டனம் தெரிவித்து மலேசியா கடிதம் அனுப்பியிருப்பதாக இந்தோனேசிய சுற்றுச்சூழல், காட்டுவள அமைச்சர் சித்தி நூர்பயா கூறியதாக இந்தோனேசிய ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது சைனல் அபிடின் அவ்வாறு கூறினார்.