முஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு எம்டியுசி கண்டனம்

முஸ்லிம்-அல்லாதாரின் பொருள்களைப் புறக்கணிக்குமாறு சில தரப்புகள் விடுத்துள்ள கோரிக்கை, இன, சமய உணர்வுகளின் அடிப்படையில் விடுக்கப்பட்டது என்பதாலும் அது நாட்டுக்கு ஆரோக்கியமற்றது என்பதாலும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்குப் பதிலாக மலேசியர்கள் தயாரிக்கும் எல்லாப் பொருள்களையுமே ஆதரிப்பது நல்லது என எம்டியுசி தலைவர் ஹலிம் மன்சூர் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஹலால் பொருள்களை வாங்குங்கள் என்று ஊக்குவிப்பது நல்லதுதான் ஏனென்றால், அது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப உள்ளது. அதேபோல் பூமிபுத்ரா பொருள்களை வாங்குமாறு ஊக்குவிப்பதும் தவறில்லை.

ஆனால், மற்ற உள்நாட்டுப் பொருள்களைப் புறக்கணித்துத்தான் அதைச் செய்ய வேண்டும் என்பது சரியல்ல.

பயனீட்டாளர்கள், தொழிலாளர் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் அரசியல் நோக்கங்களை மட்டுமே பெரிதாக நினைத்துச் செயல்படும் சில தரப்பினரின் விருப்பத்துக்குப் பலியாகி விட வேண்டாமென்று அவர் கேட்டுக்கொண்டார்.