காலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச் சட்டத்தை ஒழிப்பீர், பி.எஸ்.எம். இளைஞர் அணி கோரிக்கை

நேற்றிரவு, 1948 தேசத் துரோகச் சட்டத்தின் கீழ், போலிசாரால் கைது செய்யப்பட்ட, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) செயற்பாட்டாளர் காலிட் இஸ்மத் சற்றுமுன்னர் விடுவிக்கப்பட்டார்.

தங்கள் விசாரணைக்கு உதவும் வகையில், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த போலிசார், அவரைத் தடுத்து வைக்கவில்லை என பி.எஸ்.எம். இளைஞர் அணி தலைவர் நிக் அஸிஸ் அஃபிக் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“காவல்துறையினர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில், நேரத்தையும் வளத்தையும் வீணடிக்கும் வகையில் எங்கள் செயற்பாட்டாளர்களைத் தடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

“நாங்கள் எப்போதும் போலிசாருடன் ஒத்துழைக்கவும் வேண்டியத் தகவல்களை வழங்கவும் தயாராக இருக்கிறோம் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார் அவர்.

பேரரசியாரின் அக்கறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட பி.எஸ்.எம். இளைஞர் அணி, தேசத் துரோகச் சட்டத்தை ஒழிக்குமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.

“தவறான புரிதலை எளிதாக்கும் வகையில், இந்தப் பிரச்சினையில் உடனடியாகப் பதிலளித்த பேரரசியாரின் அக்கறைக்கு நன்றி.

“நேற்றிரவு முதல், எங்களுடன் இணைந்திருந்த நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் விஸ்வா & சின் யூ அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம்,” என்று நிக் அஸிஸ் கூறினார்.

“அதுமட்டுமின்றி, வாக்குறுதியளித்தபடி தேசத் துரோகச் சட்டத்தை இரத்து செய்யுமாறு மலேசிய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

“முன்னதாக, இந்தக் கொடூரச் சட்டம் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைக் கைதுசெய்யப் பயன்படுத்தப்பட்டது. தற்போது இது புதிய மலேசியாவில் தொடர்வது குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம்.

“தேசத்துரோக சட்டம் என்பது மனித உரிமைகளை மீறும் மற்றும் பேச்சு உரிமையைக் கொள்ளையடிக்கும் ஒரு செயலாகும். தேசத்துரோகச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்து, இதுவரை கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என நாங்கள் பி.எச். அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று நிக் அஸிஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.