அமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்…! பினராயி எச்சரிக்கை

திருவனந்தபுரம்: நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை கையில் எடுத்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகம் மட்டுமன்றி இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் மொழியை வைத்து இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தி தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் என்ற அமித்ஷாவின் பேச்சு ஏற்கத் தக்கதல்ல எனவும், அவரது பேச்சை கவனித்தால், தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டத்தை போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற நடவடிக்கைகளை இத்துடன் கைவிட்டு விட வேண்டும் என பினராயி எச்சரித்துள்ளார். மேலும், நாடு எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகள் பற்றி மக்கள் சிந்திக்கக்கூடாது எனவும், அவர்களை திசை திருப்பும் முயற்சியாகவே அமித்ஷா இந்தியை கையில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: