பருவநிலை மாற்ற ஐ.நா. மாநாடு தீர்வு தருமா? 5 ஆண்டுகளில் கார்பன் மாசுபாடு 20 சதவீதம் அதிகரிப்பு

பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க நியூயார்க்கில் ஐநாவின் சிறப்பு மாநாடு சற்று முன்னர் கூடியுள்ள நிலையில், புவி வெப்பமடைதலின் அறிகுறிகளும் தாக்கங்களும் கடந்த சில ஆண்டுகளில் துரிதமாகி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கை செய்துள்ளது.

வானிலை குறித்த தரவுகள் சேகரிக்கப்படத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில், 2014 முதல் 2019 வரையிலான ஐந்தாண்டுகளே மிகவும் வெப்பமானது என்று உலக வானிலை ஆய்வு மையத்தின் தரவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்பன் உமிழ்வின் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் இதே காலக்கட்டத்தில் கடல் நீர்மட்டம் உயர்வதும் துரிதமடைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து காணப்படும் வெப்பத்தை சமீபத்திய உலகளாவிய மாற்றங்களுடன் ஒப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

1850ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலகட்டத்தில் உலகின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 0.2C வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கார்பன் உமிழ்வு அதிகரிப்பதன் விளைவாகும். 2015 – 2019க்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட கார்பனின் அளவு முந்தைய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 20% அதிகரித்துள்ளது.

அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்: பலனளிக்குமா ஐநாவின் சிறப்பு கூட்டம்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதே இதில் மிகவும் வருந்தத்தக்க விடயம்.

1993ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3.2மிமீ அளவு உயர்ந்து வந்த கடல் நீர்மட்டம், 2014 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 5மிமீ என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. 2007 – 2016க்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 மிமீ உயரம் கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

“கடல் நீர்மட்டம் உயர்வது தீவிரமடைந்துள்ள நிலையில், அண்டார்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் காணப்படும் பனிப்பாறைகள் திடீரென உருகும் பட்சத்தில் இதில் மேலதிக உயர்வை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்” என்று உலக வானிலை ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளர் பெட்டேரி தலாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“கடல் நீர்மட்ட உயர்வு மற்றும் தீவிர வெப்பமண்டல புயல்கள் மனித மற்றும் பொருளாதார பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்தாண்டு பஹாமஸ் மற்றும் மொசாம்பிக்கில் நடந்தேறிய மோசமான தாக்கங்களை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியும்.”

இந்த அறிக்கை பெருங்கடல்களுக்கான அச்சுறுத்தல்களையும் பட்டியலிடுகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் 90 சதவீதத்துக்கும் அதிகமான வெப்பத்தை கடலே தாங்கிக்கொள்கிறது. உலக வானிலை ஆய்வு மையத்தின் பகுப்பாய்வின்படி, 2018இல் மிக உயர்ந்த கடல் வெப்ப உள்ளடக்க மதிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் எந்த பகுதியை எடுத்துக்கொண்டாலும் ஒரே மாதிரியான பிரச்சனை நிலவுவதை இந்த ஆய்வறிக்கை உறுதி செய்கிறது. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால் இயற்கையின் சூழலியல் அமைப்பு பாதிக்கப்பட்டு வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

“பருவநிலை மாற்றம் தீவிரமான நிலையை அடைந்துள்ளது” என்று கூறுகிறார் பிரிட்டனிலுள்ள ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் பிரையன் ஹோஸ்கின்ஸ்.

“பள்ளி குழந்தைகள் எழுப்பும் அழுகுரல்களுக்கு நாம் செவிமடுக்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்துவது மட்டுமின்றி, பருவநிலையில் தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறுகிறார்.

‘ஆடம்பர பேச்சுகள் இல்லை’

அண்டானியோ குட்டரஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஅண்டானியோ குட்டரஸ்

பருவநிலை மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக இன்று கூடும் ஐ.நா. சிறப்பு மாநாட்டுக்குத் தெரியப்படுத்துவதற்காக இந்த ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஒரு நாள் மாநாடு வெறும் பேச்சு மட்டும் அல்லாமல் செயல்பாட்டை முன்னிறுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது என்று கூறுகிறார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ்.

“ஆடம்பரமான உரைகளுடன் அல்லாமல், உறுதியான திட்டங்களுடன் வருமாறு நான் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்” என்று சிறப்பு கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பேசிய அவர் தெரிவித்தார்.

“தீர்வுகள், உறுதிமொழிகள் மற்றும் செயல்பாட்டையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த தசாப்தத்தில் கார்பன் உமிழ்வை வியத்தகு முறையில் குறைப்பது குறித்தும், 2050ஆம் ஆண்டு வாக்கில் கார்பன் நீக்கம் குறித்தும் பல அர்த்தமுள்ள திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் அறிவிப்புகள் வெளிவரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார். -BBC_Tamil