சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை: ”நினைத்துப் பார்க்க முடியாத அளவு கச்சா எண்ணெய் விலை உயரும்”

இரானால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின்  சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியொன்றில், கஷோக்ஜி கொலை குறித்து தன் மீது சுமத்தப்படும்  குற்றச்சாட்டுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்  ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து பேசியிருக்கிறார்.

சௌதி அரசை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதி வந்த அந்நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் கஷோக்ஜி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கியில் உள்ள சௌதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

இது குறித்து ஞாயிற்று கிழமை வெளியான பேட்டியில் பேசியுள்ள சல்மான், ”சௌதி அரேபியாவின் தலைவராக இந்த விவாகரத்தில் நான் முழுப்பொறுப்பேற்கிறேன். குறிப்பாக சௌதி அரசுக்காக வேலைபார்க்கும் சில தனி நபர்கள் இந்த  கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் பொறுப்பேற்கிறேன்” என்றார்.

ஆனால் கஷோக்ஜியை கொலை செய்ய  உத்தரவிட்டதாகவோ அல்லது கஷோக்ஜி கொலை செய்யப்படுவது குறித்து  ஏற்கனவே தனக்கு தெரியும் என கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் தெரிவித்தார்.

சௌதி அரசு இந்த கஷோக்ஜி கொலை விவகாரம் குறித்து 11 பேரை சிறையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

’இரான் மீது நடவடிக்கை வேண்டும்’

மத்திய கிழக்கு பிராந்தியம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சௌதி அரேபியாவுக்கு இரான் எதிரி நாடு. அதிபர் டிரம்ப் இரானுடனான அணுசக்தி  ஒப்பந்தத்தில்  இருந்து வெளியே வந்தபிறகு  அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றின் மீது 18 டிரோன்கள் மற்றும் ஏழு குரூஸ் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சௌதி கூறியது.

யேமெனின்  ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியது. ஆனால் சௌதியும் அமெரிக்காவும் உலக அளவில் எண்ணெய் விலை 5% அதிகரிக்க காரணமான  இந்த தாக்குதலுக்கு பிண்ணனியில் இரான் இருப்பதாக கூறின.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரானை கடுமையாக எச்சரித்தார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த தாக்குதல் மற்றும் மே மாதத்தில் நடந்த நான்கு தாக்குதல்கள்  உள்ளிட்டவற்றுக்கும் இரான் மீது குற்றம் சுமத்தியது அமெரிக்கா. ஆனால் இரான் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

குறிப்பாக சௌதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீது நடந்த தாக்குதலும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவந்தது. இந்நிலையில்தான் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

”இரான் மீது உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலக நாடுகளின் நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் பார்க்கக்கூடும்.  எண்ணெய் வழங்கலில் பிரச்சனை ஏற்படும். இதனால்   நமது வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத வகையில், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும்.

மத்திய கிழக்கு பிராந்தியம்தான் உலகின் ஆற்றல் தேவைகளில் 30% பூர்த்தி செய்கிறது, உலகத்தின் 20% வர்த்தகம் இங்கே நடைபெறுகிறது. உலகின் 4% ஜிடிபியில் பங்கு வகிக்கிறது. ஆகவே இவற்றில் சிக்கல் ஏற்பட்டால் உலக பொருளாதாரமே சிதைந்துவிடும்.

இது சௌதி அரேபியா அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல” என்றும் இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.  -BBC_Tamil