தமிழ் உலகின் தொன்மையான மொழி: நரேந்திர மோதி சென்னையில் பேச்சு

உலகின் பழமையான மொழியின் தாயகமாக தமிழ்நாடு உள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இன்று திங்கள்கிழமை சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோதி இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் மோதி ஆற்றிய உரை பின்வருமாறு:

இது ஒரு குறிப்பிடத்தகுந்த கல்வி நிறுவனம்; இங்கு மலைகள் நகரும், நதிகள் நிற்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோம். இதற்கு ஒரு தனி மேன்மை உள்ளது. உலகின் பழமையான மொழியின் தாயகமாக இது உள்ளது.

நான் அமெரிக்கா சென்றிருந்தபோது பல நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களை சந்தித்தேன். அவர்களுடன் நான் பேசியதில் ஒரு விஷயம் பொதுவாக இருந்தது. அது நேர்மறையான நம்பிக்கை.

உலகம் முழுவதும், இந்தியர்கள் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் சாதனை படைத்து வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் ஐஐடியின் முன்னாள் மாணவர்கள்.

இன்று ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா செல்கிறது. உங்களின் கண்டுபிடிப்பு, உத்வேகம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன் இந்த கனவை நிறைவேற்றும்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவை மாணவர்களின் தொடக்க காலத்திலேயே கற்பிக்கப்படுகிறது

அடுத்த சவால் புதிய நிறுவனங்களுக்கான சந்தையை உருவாக்குவது. “ஸ்டாடப் அப் இந்தியா ப்ரோகிராம்” இந்த சவாலை நீங்கள் எதிர்கொள்வதற்கு உதவி செய்யும்.

நீங்கள் எங்கு பணி செய்தாலும், இந்தியாவை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

முன்னதாக சென்னை ஹேக்கதான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களிடம், கற்சிற்பங்கள் மற்றும் கற்கோவில்களுக்கு புகழ்பெற்ற மாமல்லபுரத்திற்கு வருகை தாருங்கள் என்றும், அது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இடம் என்றும் தெரிவித்தார்.

‘தமிழ் குறித்து அமெரிக்காவில் பேசினேன்’

அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் இறங்கிய உடனே அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் மோதி உரையாற்றினார்.

வணக்கம் என்று தொடங்கிய மோதி, சென்னை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தமிழில் தெரிவித்தார்.

அதற்கு அங்கிருந்த கூட்டத்தில் சிலர், சென்னை உங்களை வரவேற்கிறது என்று இந்தியில் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து ஹிந்தியில் பேசினார் மோதி. அதை ஹெச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார். மோதி பேசியது:

2019 தேர்தலில் வெற்றியடைந்த பிறகு முதன்முதலாக சென்னைக்கு வந்துள்ளேன். நான் ஐஐடி நிகழ்ச்சிக்காக இங்கே வந்திருக்கிறேன். ஆனால் இங்கே நீங்கள் பெருமளவில் வந்திருப்பதால் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று தெரிவித்தார்

அமெரிக்காவில் பேசும்போது, தமிழ் மொழி உலகிலேயே பழமையான மொழி என்பதை நான் அங்கு தெரிவித்தேன். அமெரிக்க ஊடகங்கள் அனைத்திலும் இப்போது அந்த செய்திதான் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நான் அமெரிக்காவில் பார்த்த விஷயம் என்னவென்றால், இந்தியாவை குறித்து அவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. நாம் நிச்சயமாக நமது நாட்டு நலனுக்காக உழைப்போம். இருந்தாலும் உலக நன்மைக்காக நாம் செயல்படுவோம் என்ற எதிர்பார்ப்பையும் என்னால் பார்க்க முடிந்தது.

இந்தப் பணியை டெல்லியில் அமர்ந்து கொண்டு மட்டும் செய்ய முடியாது. நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள், அவர்கள் கிராமத்தில் இருந்தாலோ, நகரத்தில் இருந்தாலோ, ஏழையோ பணக்காரனோ, இளைஞர்களோ அல்லது முதியவர்களோ 130 கோடி மக்களும் சேர்ந்து செய்ய வேண்டிய பணியாகும் இது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாம் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மோதி தமிழகம் வந்ததை தொடர்ந்து பிரதமரை வரவேற்றும், அவரை திரும்பிப் போகச் சொல்லியும், #gobackmodi என்றும் #TNWelcomesModi என்றும் எதிரும் புதிருமான ஹாஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன. -BBC_Tamil

TAGS: