நரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது தமிழகத்தில் கால் பதிக்கும் தந்திரமா?

தொடர்ந்து தமிழின் பெருமையைப் பேசுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

அண்மையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கணியன் பூங்குன்றனின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற பாடல் வரிகளை எடுத்துக் காட்டிப் பேசிய நரேந்திர மோதி, தாம் உலக அரங்கில் அப்படிப் பேசியது குறித்து ஐ.ஐ.டி. விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்தபோது மீண்டும் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய விடுதலை நாள் விழா டெல்லி செங்கோட்டையில் நடந்தபோது, அதில் பேசிய மோதி ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். அதற்கு முன் கடந்த 2018 பிப்ரவரி 16-ஆம் தேதி டெல்லி தல்கதோரா உள்ளரங்கில், தேர்வை எதிர்கொள்வது பற்றி பல மாநில மாணவர்களிடையே பேசிய நரேந்திர மோதி, சம்ஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையானது என்பது சிலருக்கு மட்டும்தான் தெரியும் என்றும், மிகவும் இனிமையான அழகான தமிழில் தம்மால் பேசமுடியவில்லை என்று வருந்துவதாகவும் தெரிவித்தார்.

பொதுவாகத் தமிழ்நாட்டுக்கு வரும் வட இந்திய தலைவர்கள் வணக்கம், நன்றி போன்ற சொற்களை மேடையில் பேசி கை தட்டல் வாங்குவது வழக்கம். ஆனால், சம்ஸ்கிருதம் எல்லா மொழிகளைவிட மேம்பட்டது என்று பேசும் இந்துத்துவ முகாமில் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோதி, சம்ஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்று பேசியதும், தொடர்ந்து தமிழை பெருமைப்படுத்தும் வாசகங்களை, மேற்கோள்களை தமது உரையில்இணைத்துக் கொள்வதும் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

நீட், கீழடி, ஹைட்ரோ கார்பன், இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை போன்ற அடுக்கடுக்கான விஷயங்களில் பாஜக-வை எதிர்த்து தமிழகம் போராடி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு தழுவிய அளவில் பாஜக பெருவெற்றி பெற்றது. ஆனால், தமிழகம் பாஜக கூட்டணிக்கு மோசமான தோல்வியை அளித்தது. பிரதமர் மோதி தமிழகம் வரும்போதெல்லாம் மோதியே திரும்பிப்போ' என்று பொருள்தரும்GO BACK MODI’ ஹேஷ்டேக் பிரசாரம் ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாகிறது.

இந்நிலையில், தொடர்ந்து பிரதமர் மோதி தமிழைப் பெருமைப்படுத்திப் பேசுவது எதைக் குறிக்கிறது? தமிழர்களை சாந்தப்படுத்த விரும்புகிறாரா அல்லது அரசியல் நோக்கமா? இதை தமிழகம் எப்படிப் பார்க்கிறது?

தமிழ் ஆட்சி மொழி, நீதிமன்ற மொழியாகவில்லையே

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளருமான து.ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் இது குறித்துக் கேட்டது.

டி.ரவிக்குமார்படத்தின் காப்புரிமைD.RAVIKUMAR
Image captionடி.ரவிக்குமார்

“பிரதமராக இருந்து இவற்றைப் பேசுவது முக்கியமானது. இதை நான் நிராகரிக்க விரும்பவில்லை” என்று கூறிய ரவிக்குமார், அதே நேரம், இதை சந்தேகிக்க வேண்டிய தேவை ஏன் எழுகிறது என்றால், அவரது அரசின் கொள்கை இவற்றை பிரதிபலிப்பதில்லை என்பதால்தான். அவர் தமிழின் மீது மரியாதை கொண்டிருப்பது உண்மை என்றால் மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழை அறிவிக்கவேண்டும் என்றார் ரவிக்குமார்.

“தமிழை மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக அறிவிக்கவேண்டும் என்று 1969-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை அவரது அரசு ஏற்கவேண்டும். அதைப் போலவே கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான், சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை ஏற்கவேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையும் ஏற்கவேண்டும். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது. ஆனால், அப்படி அமைக்கப்பட்டது முதல் இதுவரை 15 ஆண்டுகளாக அந்த நிறுவனத்துக்கு முழுநேர இயக்குநர் இல்லை. அதற்கு வழங்கப்பட்டு வந்த நிதியும் படிப்படியாக குறைக்கப்பட்டுவிட்டது” என்று கூறினார் ரவிக்குமார்.

“அரசமைப்புச் சட்டப் பிரிவு 351 இந்தியை வளர்ப்பதற்கு அரசு ஆதரவு வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. இந்த சட்டம் இயற்றப்பட்டபோது இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்படவில்லை. அப்படி மொழிவாரி மாநிலங்ககள் அமைக்கப்பட்ட பிறகு இந்தி என்ற ஒரு மொழியை மட்டும் வளர்ப்பதற்கு அரசு உதவுவது முறையல்ல. 8-ஆவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக்க வேண்டும். 8-ஆவது அட்டவணையில் இணைக்க கோருகிற துளு, ராஜஸ்தானி உள்ளிட்ட 38 மொழிகளையும் 8-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும்.ஆனால், இந்தியின் வளர்ச்சிக்கு 75 கோடி ரூபாய் தரப்படுகிறது. தமிழுக்கு குறைத்து குறைத்து கடைசியாக 3 கோடி ரூபாய் கொடுத்தார்கள்” என்றும் ரவிக்குமார் தெரிவித்தார்.

தமிழின் தொன்மையை பிரதமர் ஏற்றால் அத்தனை மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை உருவாக்கவேண்டும் என்பது ரவிக்குமாரின் மற்றொரு கோரிக்கை.

நிதிகொடுத்து வளர்க்கவேண்டிய நிலையில் தமிழ் இல்லை

தமிழுக்கு ஏதும் செய்யாமல் வெறுமனே பேசுகிறார் என்ற விமர்சனம் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக வைக்கப்படுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் பேசிய தமிழ்நாடு பாஜக ஊடகத் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இந்த விமர்சகர்களை “தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்கள்” என்று விமர்சிக்கிறார்.

“மத்திய அரசில் திமுக 15 ஆண்டுகள் இருந்தபோது ஏன் தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கவில்லை” என்று கேட்ட அவர், அனைத்து இந்திய மொழிகளையும் தேசிய மொழிகளாக பாஜக கருதுவதாகவும், தாய் மொழியில்தான் கல்வி கற்கவேண்டும் என்பது பாஜகவின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.

நாராயணன் திருப்பதிபடத்தின் காப்புரிமைNARAYANAN TIRUPPATHI
Image captionநாராயணன் திருப்பதி

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிறுவப்பட்டது என்பதையும், அதற்கு நிதியுதவி குறைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் குறிப்பிட்டபோது, “தமிழுக்கு நிதியெல்லாம் குறைக்கப்படவில்லை. நிதிகொடுத்து வளர்க்க வேண்டிய நிலையில் தமிழும் இல்லை” என்று தெரிவித்தார் நாராயணன் திருப்பதி.

சிவசேனைபோல ஒரு பெருமித அரசியலை வளர்க்க விரும்புகிறார்கள்

தமிழுக்கு மோதி ஏதும் செய்யவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், முன்பு எந்தப் பிரதமரும் இப்படித் தொடர்ச்சியாக ஐ.நா., செங்கோட்டை, மாணவர் கூட்டம் என எல்லா இடங்களிலும் தமிழைப் பெருமைப்படுத்திப் பேசியதில்லையே என்று எழுத்தாளரும், வழக்குரைஞருமான இரா.முருகவேளிடம் கேட்டது பிபிசி தமிழ்.

இரா.முருகவேள்படத்தின் காப்புரிமைஇரா.முருகவேள்
Image captionஇரா.முருகவேள்

ஒரு இடத்தில் கால் பதிப்பதற்காக இது போன்ற தந்திரங்கள் நடப்பது வழக்கம்தான் என்று கூறுகிறார் முருகவேள்.

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ராஜீவ் காந்தி பலமுறை தமிழகம் வந்தததாகவும், அவர் பல முறை திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியிருப்பதாகவும் கூறும் அவர், தனக்கு ஓர் அறிவு ஜீவி பிம்பம் வேண்டும் என்பதற்காக பல அடையாளங்களையும் தொட்டுப் பேசுவது ஓர் உத்தியாக இருக்கக்கூடும் என்கிறார்.

அத்துடன், மகாராஷ்டிரத்தில் சிவசேனை செய்வதைப் போல இந்து தேசியத்துக்கு உட்பட்ட, தொழிற்சங்க உணர்வு போன்றவை அண்டாத, ஒரு மொழிப்பற்று உணர்வை அடிப்படையாக கொண்ட அரசியலை கட்டியெழுப்ப அவர்கள் விரும்புகிறார்கள் என்கிறார் முருகவேள். -BBC_Tamil

TAGS: