அமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி பேச்சு: “ஒவ்வோர் ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்”

சமீபத்தில் அஸ்ஸாமில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற தேசியக் குடியுரிமை பதிவேடு தயாரிக்கும் திட்டத்தை (என்.ஆர்.சி.) மேற்கு வங்க மாநிலத்திலும் அமல்படுத்தி, அந்த மாநிலத்தில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றப்போவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “மாநில முதல்வர் மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி அமல்படுத்தப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறிவருகிறார். ஆனால், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார் என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றார்.

மேற்கு வங்கத்தில் தேசியக் குடியுரிமைப் பதிவேடு திட்டத்தை அறிமுகப்படுத்தும் சாத்தியம் அந்த மாநிலத்தில் பரவலான அச்சத்தை ஏற்படுத்தும் என்று பிபிசி இந்தி பிரிவின் நிதின் ஸ்ரீவத்ஸவா தெரிவிக்கிறார்.

மேற்குவங்க மாநிலத்தில் இப்போது பிரதமர் நரேந்திர மோதிக்கும், அவருடைய கட்சிக்கும் பரம எதிரியாகக் கருதப்படும், எதிரிகளை அச்சப்பட வைக்கும் அரசியல்வாதியான மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் (டி.எம்.சி.) ஆட்சி நடைபெற்று வருகிறது.

அருகில் உள்ள வங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கை செய்யப்பட்ட 1971 மார்ச் 24 ஆம் தேதிக்கு முன்னதாக மாநிலத்தில் குடியேறியதாக நிரூபிக்க முடிந்தவர்களின் பட்டியலைக் கொண்டதாக தேசியக் குடியுரிமைப் பதிவேடு (என்.ஆர்.சி.) உள்ளது.

அசாமில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட இதன் இறுதி அறிக்கையின்படி, மாநிலத்தில் உள்ள 1.9 மில்லியன் பேருடைய குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்ய 120 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அசாமில் வெளியான இறுதி அறிக்கை பற்றி, கருத்து கூறுவதில் இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) விலகியே நிற்கிறது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அந்தக் கட்சியினர், மற்ற மாநிலங்களிலும் இதை அமல்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.

அசாமின் என்.ஆர்.சி. நீண்ட மற்றும் சர்ச்சைக்குரிய நடைமுறையாக உள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஅசாமின் என்.ஆர்.சி. நீண்ட மற்றும் சர்ச்சைக்குரிய நடைமுறையாக உள்ளது.

சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள வங்கதேசத்தவர்களை அடையாளம் காண்பதற்கு அசாமில் இந்த நடைமுறை தேவைப்பட்டது என்று அரசு கூறியது. அருகில் உள்ள மேற்குவங்க மாநிலமும், வங்கதேசத்துடன் 2,000 கி.மீ. நீள எல்லையைக் கொண்டுள்ளது.

அசாமில் இந்த நடைமுறை நீண்டதாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருந்தது. மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இந்த நடைமுறையால் குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன, மக்கள் தற்கொலை செய்து கொண்டனர், `அன்னியர்கள்’ என்ற சந்தேகத்தின் பேரில் ஏராளமானோர் தடுப்புக் காவல் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

இந்த நடைமுறை அதிகாரப்பூர்வமாக மேற்கு வங்கத்தில் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், வந்துவிடும் என்ற அச்சமே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உயிரிழந்தவர்களில் 38 வயதான அனந்த ராயும் ஒருவர். தாம் இந்தியர் என்று `நிரூபிக்க’ போதிய ஆவணங்கள் இல்லாததால் கவலை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் பாகுபாடு காட்டப்படுவதால் அங்கிருந்து பெங்காலி-இந்து பெற்றோருடன் இந்தியாவுக்கு அவருடைய குடும்பம் குடிபெயர்ந்த போது அனந்த ராய் 11 மாத குழந்தையாக இருந்தார்.

என்.ஆர்.சி.க்கு மம்தா பானர்ஜி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார், அதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியுள்ளார்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஎன்.ஆர்.சி.க்கு மம்தா பானர்ஜி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார், அதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியுள்ளார்.

“அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியதில் இருந்து, எங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்தியாவில் எங்களுக்கு வாக்குரிமை உள்ளது என்றாலும், எங்களிடம் நிலம் அல்லது வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை. குறிப்பாக இது குறித்து அனந்த ராய் மிகுந்த கவலையாக இருந்தார். நாம் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று கூறி வந்தார்” என்று அவருடைய மூத்த சகோதரர் தக்சடா ராய் பிபிசியிடம் தெரிவித்தார்.

என்.ஆர்.சி.யில் பெயர் நீக்கப்படும் என்று தற்கொலை செய்துகொண்டவர்

1947 மற்றும் 1971ல் வங்கதேசத்தில் இருந்து இந்து மற்றும் முஸ்லிம்கள் பெருமளவில் குடிபெயர்ந்து வந்த வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழிலாளியாக இருந்தவர் கமால் உசேன் மோன்டல். அவருக்கு வயது 36. என்.ஆர்.சி.யில் தன்னுடைய பெயர் நீக்கப்படும் என்ற அச்சத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவருடைய மரணத்துக்குப் பிறகு காவல் துறையில் அவருடைய குடும்பத்தினர் புகார் பதிவு செய்தனர். தாம் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கான பாதுகாப்பு மையத்தில் அடைக்கப்படுவோம்'' என்று அவர் அச்சம் தெரிவித்து வந்தார் என்று அவர்கள் புகாரில் கூறியுள்ளனர். தன்னுடைய குடியுரிமையைநிரூபிக்க” உதவக் கூடிய வகையில் தன் தந்தையின் நில உரிமை ஆவணங்களைப் பெறுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததால், வெறுப்படைந்துள்ளார்.

என்.ஆர்.சி.யை விமர்சிக்கும் பலரும், ஏழை முஸ்லிம்களின் இந்தியக் குடியுரிமையைப் பறிக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் மறைமுக சதி இது என்று கூறுகின்றனர்.

அரசு இதை மறுத்துள்ளபோதும், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான குடியுரிமை (திருத்த) மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

“இந்து, பௌத்த, ஜைன, கிறித்துவ அகதிகளுக்கு வெளியேறும் நிர்ப்பந்தம் இல்லை”

செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் அமித் ஷா இதை கோடிட்டுக் காட்டினார். “இந்து, சீக்கிய, ஜைன, பௌத்த, கிறிஸ்தவ அகதிகள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதியை இன்று அளிக்க நான் விரும்புகிறேன். வதந்திகளை நம்பாதீர்கள். என்.ஆர்.சி.க்கு முன்னதாக நாங்கள் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வருவோம். இந்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை அந்த மசோதா உறுதி செய்யும்” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கும் இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள், பக்கத்து நாடுகளில் மத வெறுப்பு காரணமாக வெளியேறும் மத சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் வகையிலான மசோதா என்பதால், முஸ்லிம்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

வன்முறை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட காரணத்தால், அசாமில் இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionவன்முறை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட காரணத்தால், அசாமில் இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

91 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மேற்குவங்க மாநிலம், இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. அதில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக உள்ளனர்.

என்.ஆர்.சி.க்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி குரல் கொடுத்து வருகிறார். ஆனால், அது குறித்த கவலை அந்த மாநிலத்தில் வேரூன்றிவிட்டதாகத் தெரிகிறது.

“திடீரென தங்கள் மீது என்.ஆர்.சி. திணிக்கப்பட்டால் ”சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால் தங்களுடைய அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்களைத் தயாராக வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சில முஸ்லிம் அமைப்புகள் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தன, கூட்டங்கள் நடத்தின.

சட்டவிரோதக் குடிமக்களுக்காக - என்.ஆர்.சி. இறுதிப் பட்டியலின்படி பெரும்பாலான முஸ்லிம்கள் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனர் - அசாமில் தடுப்புக் காவல் மையங்களை பெரிய அளவில் கட்டும் பணி தொடங்கியதில் இருந்தே வாழ்க்கை இயல்பானதாக இருக்கவில்லை'' என்று முகமது நசிருல்லா பிபிசியிடம் கூறினார்.(எங்களுடைய) அனைத்து ஆவணங்களையும் நாங்கள் தயாராக வைத்துக் கொள்வதே நல்லது. எங்களில் பலர் சட்டவிரோதக் குடிமக்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள்”என்றார் அவர். -BBC_Tamil

TAGS: