எதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா அதற்கான இடமல்ல- பிரதமர்

எதிர்ப்புத் தெரிவிக்க நினைத்தால் அதற்கு வேறு இடங்கள் உள்ளன என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

சடங்குப் பூர்வமான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போது அதில் எதிர்ப்பைக் காட்டுவது முறையல்ல என்றாரவர்.

மலாயாப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக துணை வேந்தர்(விசி) பதவி விலக வேண்டும் என்ற பதாதையைக் காண்பித்த சம்பவம் பற்றிக் கருத்துரைத்தபோது மகாதிர் அவ்வாறு கூறினார்.

“பட்டமளிப்பு விழாவுக்கு வந்த அனைவருமே ஏதாவது ஒரு விவகாரம் தொடர்பில் அப்படி எதிர்ப்பைக் காண்பிக்க முனைந்தால் என்னவாகும், சற்றே எண்ணிப் பாருங்கள்”, என்றாரவர்.

வொங் யான் கெ தனது சான்றிதழைப் பெற்றுக்கொண்டு மேடையிலிருந்து இறங்கும்போது ஒரு பதாதையை உயர்த்திப் பிடித்தார். அதில் “இது மலேசிய நாடு. இனவாதியை விலக்குவீர். விசி பதவி விலக வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபர் 6-இல் மலாய்த் தன்மான காங்கிரசில் யுஎம் துணை வேந்தர் டாக்டர் அப்துல் ரகிம் ஹஷிம் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே வொங் அப்படி நடந்து கொண்டாராம்