இருக்கிறாள் காதலி

இரு பெண்கள் என்னை

விரும்புவதால் அவர்களுக்கு
நானொருவன் காதலன்!

தென்பொதிகை பிறந்தவள் ஒருத்தி
தண்நிலவில் வசிப்பவள் மற்றொருத்தி!

அழுக்காற்றில் புருவமுயர்த்தி கண்ணில்
கனல் உமிழ்வது எதனால்?

உள்ளதை சொல்கிறேன் அதில்
உனக்கென்ன வந்தது நஷ்டம்!

பசுங்கொடிகள் சூழ்ந்த முற்றத்தில்
படுத்தி ருந்தேன் கட்டில் மேலே
மெல்லியஆடை நழுவ பூவில்
புறப்பட்ட புது வாசத்துடன்
அருகில் வந்தமர்ந்தாள் மங்கை!
இளையவள் குறும்பில் மழலையவள்!
வெடுக்கென பறித்தாள் ஆடையை
திடுக்கிட்டு தடுத்து களைந்த
ஆடையை திருத்தினேன்!
குறுநகையாள் என்னுரிமை இதென்று
மீண்டும் பறித்தாள் ஆடையை!
நாழிகையில் உடலில் பரவி சுகமாய்
தழுவி நல்லுறக்கம் தந்தாள்!

ஆழ்ந்த உறக்கத்தில் பதறி எழுந்தேன்!
தாழ்ந்த மனதின் நினைவை திருடி
தளிர்மேனியில் குருவட்ட நிலவொளி வீச
வெள்ளிகுடத்தில் பெய்த மழையாய்
சிரித்து சிந்தை கொண்டாள் ஒருத்தி!
மல்லிமொட்டு இதழ் குவித்து
அல்லிமலர் அசைத் தழைத்து
மனதில் புதுநோய் பரவ செய்த
மைவிழியாளை தொடர்ந்தேன்!
கைவளை ஒலித்து தூக்கம் பறித்தவள்
காரிருளில் நிழலாக கரைந்தாள்!

சுகமான உறக்கம் தந்தவள் “தென்றல்”
உறக்கமதை பறித்தவள் “காதல்”

-விஷ்ணுதாசன்

TAGS: