ஹாடி: எதிரணிக்கு மசீச போன்ற தீவிரவாதமற்ற முஸ்லிம்-அல்லாத கட்சியும் தேவைதான்

தஞ்சோங் பியா இடைத் தேர்தலில் மசீச போட்டியிடுவதை ஆதரித்த பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்,  எதிர்ர்க்கட்சிக் கூட்டணிக்குத்   தீவிரவாதமற்ற முஸ்லிம் அல்லாதாரும் தேவைதான் என்றார்.

அப்படிப்பட்ட முஸ்லிம்-அல்லாதார் கட்சிகளில் மசீசவும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், ஒரு நேரத்தில் பிஎன்னில் இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கிய மசீச   இன்று   ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கொண்டுள்ள கட்சியாகியுள்ளது என்றார்.

எதிர்வரும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் மசீச-வின் வே ஜெக் செங், பிகேஆரின் கர்மாயினி சார்டினி, கெராக்கானின் வெண்டி சுப்ரமணியம், பெர்ஜாசாவின் டாக்டர் பத்ருல்ஹிஷாம் அப்துல் அசீஸ், சுயேச்சை வேட்பாளர்கள் பரிடா அர்யானி அப்துல் கப்பார், டாக்டர் இங் சுவான் லொக் ஆகிய ஐயவரின் போட்டியை எதிர்நோக்குகிறார்.

இரண்டு தவணைக்கு தஞ்சோங் பியாய் எம்பி-ஆக இருந்துள்ள ஜெக் செங், கடந்த பொதுத் தேர்தலில் பெர்சத்துவின் டாக்டர் முகம்மட் ஃபாரிக் முகம்மட் ரஃபிக்கிடம் 524 வாக்கு வேறுபாட்டில் தோற்றார்.

முகம்மட் ஃபாரிக் செப்டம்பர் மாதம் காலமானதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இடைத் தேர்தலில் தஞ்சோங் பியாய் தொகுதியை எவ்வகையிலும் திரும்பக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ள ஜெக் செங்குக்கு பாஸ் முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டுள்ளது.

பாஸுடன் சேர்ந்து ககாசான் செஜாத்ரா கூட்டணி அமைத்துள்ள பெர்ஜாசா இடைத் தேர்தலில் போட்டியிட்டாலும் பாஸ் கட்சியினர் யாரும் அதன் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் மசீசவின் ஜெக் செங்குக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும் பாஸ் வலியுறுத்தியுள்ளது.