கம்போடிய எதிர்க்கட்சித் தலைவர் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டார்

மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் கம்போடிய எதிர்க்கட்சியான கம்போடிய மீட்புக் கட்சியின் (சிஎன்ஆர்பி) உதவித் தலைவர் மூ சோசுவாவைத் தடுத்து வைத்திருப்பாக ராய்ட்டர்ஸ் அறிவித்துள்ளது. கம்போடிய மீட்புக் கட்சி கம்போடியாவில் தடை செய்யப்பட்ட கட்சியாகும்.

தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி அச்செய்தியை வெளியிட்டிருந்த ராய்ட்டர்ஸ், நாடு கடத்தப்பட்ட சிஎன்ஆர்பி) தலைவர்கள் – மூ சோசுவாவும் கட்சியின் நிறுவனர் சேம் ரேய்ன்சே-யும் கம்போடியாவுக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டிருந்த வேளையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியது.

கைது தொடர்பில் மேற்கொண்டு விவரங்களைப் பெற முடியவில்லை என்றும் அது தெரிவித்தது.

இதனிடையே, சுஹாகாம் ஆணையர், ஜெரால்ட் ஜோசப் கம்போடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரும் வேறொரு நாட்டுக்குச் செல்லக்கூடும் என்றார்.

அவ்விருவரும் -அவர்களில் ஒருவர் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருப்பவர்- கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

சுஹாகாம் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு அவ்விருவரையும் சென்று கண்டனர் என ஜோசப் கூறினார்.

“தடுத்து வைக்கப்பட்ட இருவரும் நல்ல முறையில் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்”, என்றாரவர்.