பத்து எம்பி கார்மீது முட்டை வீச்சு

பிகேஆர் எம்பி பி.பிரபாகரன், நேற்றிரவு தன்னுடைய கார்மீது முட்டைகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் புகார் செய்துள்ளார்.

ஜாலான் ஈப்போவில் பப்பாரிச் உணவகத்துக்குப் பின்புறத்தில் அவரது டொயோட்டா வெல்பாயர் கார் நிறுத்தபட்டிருந்தது.

“நான் உணவகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் கார் ஓட்டுனரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விட்டேன். சந்திப்பு இரவு மணி 12.30க்கு முடிந்தது. காரை நோக்கிச் சென்றேன். காருக்கு அருகில் முட்டை ஓடுகள் கிடந்தன.

“காரின் பின்புறம் முழுவதும் மூட்டை வீசி எறியப்பட்டிருந்தது. கூரைப் பகுதியிலும் முன்புறக் கண்ணாடி முழுக்கவும் முட்டைகள் வீசி எறியப்பட்டிருந்தன.

“என் பாதுகாப்புக் குறித்து அஞ்சியே இப்புகாரைச் செய்கிறேன்”, என்று பிரபாகரன் போலீஸ் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

சில என்ஜிஓ-கள் பிரபாகரன் பத்து தொகுதி எம்பி பதவியைத் துறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வேளையில் இத்தாக்குதல் நடைபெற்றிருப்பதுதான் யோசிக்க வைக்கிறது. பிரபாகரன் பதவி விலகி பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா போட்டியிட இடமளிக்க வேண்டும் என்பது அவற்றின் கோரிக்கை.

அவர்களின் கோரிக்கைக்கும் தியான் சுவாவுக்கும் சம்பந்தம் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

எந்தத் தொடர்பும் இல்லை என்று தியான் சுவா மறுக்கிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் பிரபாகரன் ஒரு சுயேச்சையாக பத்து தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு பிகேஆர் ஆதரவு அளித்தது.

இது, தியான் சுவா அத் தொகுதியில் போட்டியிட இயலாது என்று தேர்தல் ஆணையம் ஆணையிட்டதை அடுத்து நடந்தது.