பாக்காத்தானுக்கு கிடைத்த பலத்த அடி – இராகவன் கருப்பையா

புத்ரா ஜெயாவை நோக்கி பாரிசான் – இது உண்மையாகும். மக்களின் இன்றையத் தேவைகளுக்கு தவறினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஆட்சியை இழக்க நேரிடும்.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகும் அதன் தலைவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளத் தவரினால் அந்தக் கூட்டணியை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.

பாரிசான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அத்தொகுதி மக்கள் வாக்களிக்கவில்லை. மாறாக, தலைகனம் பிடித்துத் திரியும் பக்காத்தான் கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு ஒரு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய வேட்கை. குறிப்பாக பிரதமர் துன் மகாதீரின் அண்மைய கால நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் தங்களுடைய எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர் என்றேத் தெரிகிறது.

தேசிய அளவிலும் இந்த அலைதான் தற்போதைய நிலை என்பதையும் பக்காத்தான் தலைவர்கள் உணர்வது அவசியமாகும்.

வாக்குறுதிகள்

14 ஆவது பொதுத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று கேட்கும் போதெல்லாம் மகாதீர் மிக அலட்சியமாக பதிலுரைத்து வருவது மக்களின் எரிச்சலை மேலும் அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் பாறையில் எழுதப்படவில்லை என தான்தோன்றித்தனமாகக் கூறிய அவர், அந்த வாக்குறுதிகள் ஒன்றும் ‘பைபள்’ இல்லை என்றுக் கூட ஒரு முறை இறுமாப்பாகக் குறிப்பிட்டார்.

பக்காத்தான் வெற்றி பெற்றால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது சூளுரைத்தார். ஆனால் அந்த விலைகள் பிறகு பன்மடங்கு அதிகரித்ததுதான் மிச்சம்.

மத போதகர் ஜாக்கிர் நாயக்

சர்ச்சைக்குறிய மத போதகர் ஜாக்கிர் நாயக்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மறுப்பது ஒருபுறமிருக்க, சட்டவிதிகளை பலமுறை மீறியுள்ள அவருக்கும் அவருடைய சிஷ்யன் விநோத் ஸம்ரிக்கும் எதிராக எவ்வித நடவடிக்கையும் இதுநாள் வரையில் எடுக்கப்படாதது மக்களின் சினத்துக்கு  மற்றொரு காரணமாகும்.

சொஸ்மா காவலில் 12 இந்தியர்கள்

முன்னைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய ‘சொஸ்மா’ என்ற ஒரு கொடூரமான சட்டம் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதியளித்தார் மகாதீர். ஆனால் இப்போது அதே சட்டத்தின் கீழ் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 12 இந்தியர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டில் பரிதாபமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜாவி பாடத்திட்டம்

உலகம் முழுவதும் கணிணி யுகத்தில் மின்னல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அடுத்த ஆண்டிலிருந்து தமிழ், சீன பள்ளிகளில் ஜாவி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மகாதீர் தன்மூப்பாக அறிவித்தார். பல தரப்பினர்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அவர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

மலாய்க்காரர்களின் தன்மான மாநாடு

மலாய்க்காரர்களின் தன்மான மாநாடு என்ற பெயரில், மகாதீர், தற்காப்பு அமைச்சர் மாட் சாபு, பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி, கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் முதலியோர் முண்ணிலையில் பல பேச்சாளர்கள் மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக இனத்துவேசக் கருத்துகளை மிகத் தாராளமாக இஷ்டம் போல உமிழ்ந்து மகிழ்ந்தனர். அவர்களை கண்டிக்க ஒரு நாதி இல்லை. அவர்களை நீதிமன்றத்தில் ஏற்ற பல சட்டங்கள் இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு மிகப் பெரிய மாற்றங்களுக்காக ஏங்கித் தவித்திருந்த மக்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தது என்பதுதான் உண்மை.

தந்சோங் பியாய் தொகுதியில் பிரச்சாரத்தின் போது, அங்குள்ள படகுத்துறையின் மேம்பாடுக்கு 14 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என விவசாய அமைச்சர் சாலாஹுடின் அயுப் அறிவித்தார்.

அந்தத் தொகுதியில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் துறை வசதிகள் 4 மில்லியன் ரிங்கிட் செலவில் மேம்படுத்தப்படும் என இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் அறிவித்தார். மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர டாக்டர் முஹமட் ஃபாரிட் தம்மிடம் ஏற்கனவே இதற்கான விண்ணப்பத்தை செய்திருந்தார் என சைட் சாடிக் கூறியதுதான் வேடிக்கை. இறந்தவர்களை வைத்து அரசியல் நாடகமாடுவது மிகவும் கேவலமான ஒன்றாகும்.

இதே போல இன்னும் பல அறிவிப்புகளும் செய்யப்பட்டன.

முன்னைய ஆட்சியின் போது இடைத் தேர்தல்கள் நடக்கும்  சமயங்களில் கையூட்டுக்கு சமமான இத்தகைய அறிவிப்புகளை கடுமையாக சாடிய மகாதீர், இதுவெல்லாம் இயல்பான ஒன்றுதான் என இப்போது சமாதாம் கூறுகிறார். மாமியார் உடைத்தால் மன் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?

மக்கள் முட்டாள்கள் இல்லை

ஆக, மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதனை பக்காத்தான் தலைமைத்துவம், குறிப்பாக மகாதீர் அவசியம் உணர வேண்டும்.

நாடு முழுவதும் இப்போது ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி அலையில் பாரிசான் குளிர்காயத் தொடங்கிவிட்டது. பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததிலிருந்து ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக வலுவிழந்து சிதறிக்கொண்டிருந்த அந்த கூட்டணிக்கு இப்போது புதுத்தெம்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மகாதீர்தான் காரணம் என்பதுவே மக்களின் பொதுவானக் கருத்தாகும்.

பெரும் போராட்டத்திற்கிடையில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட மக்களின் எதிர்பார்ப்புகள், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒரு பகுதிதான். ஆனால் பக்காத்தான் தலைவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

பறக்கும் கார்கள் தயாரிக்கப்  போவதாக தொழிலியல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரிட்ஸுவான் பிடிவாதமாக ஒற்றைக்காலில் நிற்கிறார். அதே போல 3ஆவது தேசிய கார் தயாரிக்கப்படும் என மகாதீர் தன்முப்பாக அறிவித்தார். கூலிமில் புதிய விமான நிலையம் கட்டப்படும் என கெடா மந்திரி பெசாரான அவருடைய மகன் முக்ரீஸ் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவெல்லாம் யார் கேட்டது? இவைகளா எங்களுடைய இப்போதையத் தேவை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

எனவே ஆணவத்தையும் அகம்பாவத்தையும் அடக்கிவைத்துவிட்டு, மெத்தனப் போக்கை கைவிட்டு, மக்களின் இன்றைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பக்காத்தான் அரசாங்கம் உடணடி முனைப்புக் காட்டவேண்டும்.

மகாதீரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும் அவருடைய சர்வாதிகார முடிவகளை ஆட்சேபிப்பதற்கும் அமைச்சர்களுக்குத் துணிவு வேண்டும். கோழிக்குஞ்சுகளைப் போல் பயந்து சுறுங்கிக் கிடக்கக் கூடாது. தாங்கள் அனுபவிக்கும் பதவி சுகங்கள் மகாதீர் கொடுத்தல்ல, மக்கள் கொடுத்தது என்பதனை அவர்கள் நன்கு உணர வேண்டும். இல்லையேல் நாடு முழுவதும் தஞ்சோங் பியாய் நிலைமைதான்.

அமெரிக்க விமான பாதுகாப்பு நிர்வாகம் அண்மையில் மலேசிய விமான பாதுகாப்புத் தரத்தை 2ஆம் நிலைக்கு தாழ்த்தியதைத் தொடர்ந்து மகாதீர் உள்பட பலரும் பலவிதமாக கருத்துரைத்தனர். ஆனால் ஏர் ஏசியா நிறுவனர் தான்ஸ்ரீ டோனி ஃபெர்னான்டஸ் மட்டும் அதற்கு நேர்முறையான ஒரு கருத்தை வெளியிட்டார்.

அதாவது நம்மை திருத்திக்கொள்வதற்கும் நிலைமையை மேம் படுத்திக்கொள்வதற்கும் அமெரிக்காவின் இந்நடவடிக்கையை நாம் ஒரு சாதகமான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அதே போல பக்காத்தான் தலைமைத்துவம் தங்களைத் திருத்திக்கொள்வதற்கு தஞ்சோங் பியாய் மக்களின் தீர்ப்பை ஒரு பாடமாகவும் வாய்ப்பாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.