இலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் தேதியைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நடைமுறையை பேணி வந்தனர்.

முதலாவது மாவீரர் நிகழ்வு

1989ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினம் எனும் பெயருடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூறும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.

இந்திய ராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர் தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

 

ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அந்த வருடத்தின் மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலை புலிகள் உத்தியோக பூர்வமாக வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அவர்கள் இந்த எண்ணிக்கையோடு இணைப்பதில்லை. அது தமிழீழ விடுதலைப் புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.

மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2008ம் ஆண்டு மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் அக்டோபர் 30ம் தேதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர்.

2009 மே 19ம் தேதி வரையான போரின் இறுதிநாள் வரை சுமார் 40,000க்கும் அதிகமான போராளிகள் வீரச்சாவு அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

2009 போர் முடிந்த பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போரின் பின்னர் இலங்கை இராணுவத்தினரால் மாவீரர்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. ‘மாவீரர் துயிலும் இல்லங்கள்’ இருந்த இடங்களை அழித்துவிட்டு அதில் இராணுவ முகாம்களை அமைத்தனர். எனினும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை அனுசரிக்கின்றனர்.

இந்த ஆண்டு மாவீரர் தினம்

இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ தற்பொழுது இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்று இருக்கும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் இம்முறை மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இல்லாத துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை தமிழ் மக்கள் செறிந்துவாழும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்த நிலையில் அதனைத் தடைசெய்வதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, மாணவர்களைப் பல்கலைக்கழகத்தினுள் இன்றும் நாளையும் நுழைவதற்குத் தடைவிதித்து அறிவித்தல் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவாலாயத்திற்கு முன்பாக 25,000 மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு வரையில் இந்த கல்வெட்டுக்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

போரில் வீரச்சாவடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினம்

நிர்வாகத்தின் தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவு தூபியில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவாயில் கதவினை உடைத்து உள் நுழைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.