ஹரப்பான்மீது முடிவெடுக்க ஜிஇ15வரை பொறுத்திருப்பீர்: வாக்காளர்களுக்கு மகாதிர் வேண்டுகோள்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்  மக்கள் பக்கத்தான் ஹரப்பானின் சாதனைகளை அளவிட அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அமிர் ஆய்வு மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்து கொண்டவர்களில் பெரும்பகுதியினர் அவரது கூட்டணிமீது நம்பிக்கை இழந்து விட்டதாகக் கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்த மகாதிர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்தாண்டுகள் தேவை என்றார்.

“அப்போதும் அவர்களுக்கு நம்பிக்கை வராவிட்டால் 15வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தலைவிதியைத் தீர்மானிக்கலாம்.

“நாங்கள் நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம். அவற்றை நிறைவேற்ற ஐந்தாண்டுகள் ஆகும்”, என்றாரவர்.

“தேர்தல் அறிக்கை தயாரித்த நேரத்தில் எங்களுக்கு முழுமையான விவரம் தெரியாது. ஆட்சிப் பொறுபபை ஏற்ற பிறகுதான் தெரிய வந்தது. முந்தைய அரசாங்கம் அவ்வளவு மோசமான நிலையில் நாட்டை வைத்திருந்தது.

“அதனால்தான் எங்கள் இலக்குகளை அடைவது சிரமமாக உள்ளது”, என மகாதிர் குறிப்பிட்டார்.