எம்ஏசிசி பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்: அன்வார் மற்றும் சைபுடினைச் சாடுகிறார் ஜக்கரியா

பக்கத்தான் ஹரப்பானிலிருந்து நீக்கப்பட்ட ஜக்கரியா அப்துல் ஹமிட், தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிய கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லாவும் தங்கள் செயலை நியாயப்படுத்த எம்ஏசிசி பின்னால் ஒளிந்துகொள்வதை நிறுத்த வேண்டும் என்று காட்டமாகக் கூறினார்.

“என்னைக் கட்சிநீக்கம் செய்தது சட்ட விரோதமானது, நியாயமற்றது. எனவே, அன்வாரும் சைபுடினும் கட்சித் தலைமைத்துவமும் தவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

“அவர்கள் செய்த செயலுக்கு எம்ஏசிசி-யைக் காரணம் காட்டி அதன் பின்னால் ஒளிந்து கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக ரிபோர்மாசி கோட்பாடுகளுக்கு ஏற்ப நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்”, என்றவர் நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

கடந்த ஆண்டு கட்சித் தேர்தலில் ஜக்கரியா வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் முயற்சியில் ஈடுப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட புலனாய்வு குறித்து எம்எசிசி அனுப்பிய கடிதத்தைப் பயன்படுத்தி பிகேஆர் மத்திய தலைமைத்துவக் குழு அவரைக் கட்சிநீக்கம் செய்தது.